

கரோனா வைரஸின் தாக்கம் தீவிர மாக இருப்பதால் சீனாவில் உயி ரிழந்தோர் எண்ணிக்கை 132-ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் உலக நாடுகள் அச்சம் கொண்டுள்ளன.
மத்திய சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வூஹான். அந்த நகரில் 1 கோடியே 10 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அடுத்த சில வாரங்களிலேயே அங்கு வைரஸ் வேகமாகப் பரவத் தொடங்கியது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்தது.
இந்நிலையில், வைரஸ் பரவு வதைத் தடுக்க வூஹான் நகரில் பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங் கள், வர்த்தக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட் டன. ரயில், பஸ் போக்குவரத்து நிறுத் தப்பட்டது. இதைத் தொடர்ந்து வூஹான் மற்றும் அதன் சுற்று வட் டாரத்தில் உள்ள 29 நகரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. சீனாவின் இதர பகுதிகளில் இருந்து 30 நகரங்களும் துண்டிக்கப்பட்டன. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டோர் பெய்ஜிங் கிலும் சிறப்பு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். வைரஸ் பாதிப்பு உள்ளதாக கண்டறியப் படுவோர் தனியாக மருத்துவமனை யில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக் கப்படுகிறது. இந்நிலையில் நேற்று வரை கரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 132-ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 6 ஆயி ரத்தை நெருங்கியுள்ளது. சீனாவின் 31 மாகாணங்களில் இந்த வைரஸ் பரவியுள்ளதாக சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் நேற்று தெரி வித்துள்ளனர். சிகிச்சை பெற்று வருவோரில் 1,239 பேரின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ள தாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. செவ்வாய்க் கிழமை மட்டும் வைரஸ் பாதிப்பால் 26 பேர் இறந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சீன அரசு தீவிர நடவடிக்கை களை எடுத்து வருகிறது.
கரோனா வைரஸ் பரவுவ தாக உலக நாடுகள் அச்சம் கொண் டுள்ளன. இதனால் உலகம் முழு வதிலும் இருந்து சீனாவுக்கு வரும் விமானங்களை பல்வேறு நிறுவனங் கள் ரத்து செய்துள்ளன. யுனைடெட் ஏர்லைன்ஸ், பிரிட்டிஷ் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சீனாவின் பல்வேறு நகரங்களுக்குச் செல் லும் விமானங்களை ரத்து செய்து விட்டன. சீனா முழுவதும் வணிக வளாகங்கள் வெறிச்சோடிக் கிடக்கின்றன.
மேலும் சீனாவில் பரவியுள்ள கரோனா வைரஸ் அதிக அளவு பரவுவதற்கான வாய்ப்புள்ள 30 நாடுகள் பட்டியலில் முதலிடத் தில் இந்தியா உள்ளது என்று பிரிட்டனிலுள்ள சவுத்தாம்ப்டன் பல் கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டவர்களுக்கு உதவி
இதனிடையே சீனாவின் வூஹா னில் தங்கியுள்ள வெளிநாட்டவர் களை அவர்களது சொந்த நாட்டுக்கு அனுப்பத் தேவையான உதவி செய்யப்படும் என்று சீன அரசு தெரிவித்துள்ளது.
ஆஸி.யில் வைரஸ் வளர்ப்பு
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் தங்களது ஆய்வக த்தில் கரோனா வைரஸை வளர்த்து சாதனை படைத்துள்ளனர். இதன் மூலம் கரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்க முடியும் என்று மெல்பர்னிலுள்ள பீட்டர் டோஹர்ட்டி இன்ஸ்டிடியூட் பார் இன்பெக் ஷன் அண்ட் இம்யூனிட்டி நிறுவன ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் ஹோமியோபதி, யுனானி மருத்துவமுறை மூலம் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்க முடியும் என்று மத்திய ஆயுஷ் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பாதிப்பு காரண மாக இந்தியாவிலிருந்து சீனாவுக்கு பயணம் செல்வதைத் தவிர்க்கு மாறு மக்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர் பாக விவரங்கள் கேட்டறிய 24 மணி நேரமும் செயல்படக்கூடிய 011-23978046 என்ற எண்ணுள்ள ஹெல்ப்லைனையும் மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்தியாவிலிருந்து சீனா, ஹாங் காங்குக்கு செல்லும் அனைத்து விமானங்களையும், இண்டிகோ ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா நிறு வனங்கள் ரத்து செய்துள்ளன.
சீனாவின் ஆளுகைக்குட்பட்ட மக்காவ் நாட்டிலும் கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்துள் ளது. இதனால் அந்த நாட்டு மக் களும் பெரும் பீதியில் உள்ளனர்.
10 கேரள மாநிலத்தவர்
இதனிடையே, சீனாவிலிருந்து கேரளா திரும்பிய 806 பேரில் 10 பேரை தனிமை வார்டுகளில் வைத்து கண்காணித்து வருவ தாக கேரள சுகாதாரத்துறை அதி காரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சீனாவிலிருந்து வந்தவர்கள் வெளியூர்களுக்கு எங்கும் பயணம் செய்யவேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா கேட்டு கொண்டுள்ளார். அவர்களுக்கு தேவையான சிகிச்சையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சீனாவில் 58 இந்திய பொறியாளர்கள்
என். மகேஷ்குமார்
ஆந்திராவில் இருந்து சீனா சென்ற 58 பொறியாளர்கள் அங்கு சிக்கி உள்ளனர். தற்போது அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இவர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சித்தூர் மாவட்டம், ஸ்ரீசிட்டியில் உள்ள டிசிஎல் நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த 96 பொறியாளர்கள் தொழில் ரீதியான பயிற்சிக்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சீனாவுக்கு அந்த நிறுவனம் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் 38 பேர் முதற்கட்ட பயிற்சி முடிந்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியா திரும்பி விட்டனர். ஆனால், அங்கு நிறுவன ஹாஸ்டலில் தங்கி எஞ்சியுள்ள 58 பேர் தொடர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர். தற்போது அங்கு கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், இவர்கள் தாயகம் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், சீனாவில் சிக்கிய பொறியாளர்களின் பெற்றோர், தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக இந்தியா திரும்பி வர முதல்வர் ஜெகன் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஆந்திர அரசு, இந்திய வெளியுறவுத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரியவந்துள்ளது.