Last Updated : 29 Jan, 2020 08:08 PM

 

Published : 29 Jan 2020 08:08 PM
Last Updated : 29 Jan 2020 08:08 PM

இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக இதற்கு முன் 2 முறை தீர்மானம் கொண்டுவந்த ஐரோப்பிய யூனியன்

புதுடெல்லி

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றம் இன்று விவாதம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற இருக்கும் நிலையில் இதற்குமுன் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் இருமுறை தீர்மானம் கொண்டுவந்துள்ளது.

ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் இந்தியா நிறைவேற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 பிரிவை ரத்து செய்தது குறித்தும் தீர்மானம் கொண்டுவந்து இன்று விவாதிக்கப்பட உள்ளது.

ஐரோப்பிய யூனியன் அமைப்பில் உள்ள 751 உறுப்பினர்களில் 626 உறுப்பினர்கள் சேர்ந்து குடியுரிமைத்திருத்தச் சட்டம் மற்றும் காஷ்மீர் 370 பிரிவு ரத்து தொடர்பாக 6 தீர்மானங்களை முன்வைத்துள்ளார்கள். இந்த தீர்மானம் இன்றும், நாளையும் விவாதத்துக்கு வைக்கப்பட உள்ளது.

இந்த தீர்மானத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் இதற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது சரியல்ல என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இதற்கு முன் இதேபோன்று ஐரோப்பிய யூனியன் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக இருமுறை தீர்மானம் கொண்டு வந்துள்ளது ஆதாரங்கள் அடிப்படையில் தெரியவந்துள்ளது.

கடந்த 2012-ம் ஆண்டு நிர்பயா பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட வழக்கிலும், அப்சல் குருவை அவரி்ன் குடும்பத்தினருக்குத் தெரியப்படுத்தாமல் தூக்கிலிட்டதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த இரு சம்பவங்களும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது நிகழ்ந்தவையாகும்.

கடந்த 2013-ம் ஆண்டு நிர்பயா வழக்கில் ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த தீர்மானத்தில், " ஜனநாயக அமைப்பைக் கொண்ட இந்தியாவுக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் முக்கியத் தொடர்பு இருக்கிறது. ஜனநாயக மதிப்புகளை, அடிப்படை உரிமைகளை, மனித உரிமைகளை, குறிப்பாக சட்டத்தின் ஆட்சியை, பெண்களின் உரிமையை உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தது

லண்டன் எம்.பியுமான ஷாபாக் முகமது

அதபோல நாடாளுமன்றத் தாக்குதலுக்குத் துணை போன அப்ஸல் குரு கடந்த 2013-ம் ஆண்டு திஹார் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.இந்த நடைமுறையை அப்போது இருந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அப்ஸல் குருவின் குடும்பத்தினருக்குக் கூட முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை.

திஹார் சிறையில் ரகசியமான முறையில் தூக்கிலிடப்பட்டார் அப்ஸல் குரு என்று கண்டித்து ஐரோப்பிய யூனியன் தீர்மானம் நிறைவேற்றியது. உலகத்தில் பெரும்பாலான நாடுகள் தூக்கு தண்டனைக்கு எதிராக இருக்கும் நிலையில், இந்தியா தூக்குத் தண்டனை நிறைவேற்றியதற்கு ஐரோப்பிய யூனியன் கண்டனம் தெரிவித்தது.

அப்ஸல் குருவை தூக்கிலிடுவது, புதைப்பதற்கு முன்கூட்டியே அப்ஸல் குருவின் மனைவிக்கும், குடும்பத்தினருக்கும் மன்மோகன் அரசு தகவல் தெரிவிக்காதது குறித்து ஐரோப்பிய யூனியன் வருத்தம் தெரிவித்தது.

இதற்கிடையே ஐரோப்பிய யூனியனில் இன்று காஷ்மீர் விவகாரத்தில் தீர்மானம் கொண்டுவர பாகிஸ்தானைச் பூர்வீகமாகக் கொண்டவரும், லண்டன் எம்.பியுமான ஷாபாக் முகமதுதான் அழுத்தம் கொடுத்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் லிபரல் கட்சியைச் சேர்ந்த முகமது, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுடன் நல்ல நட்பில் இருக்கும் முகமது, இந்தியாவுக்கு எதிராகப் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x