Last Updated : 29 Jan, 2020 06:04 PM

 

Published : 29 Jan 2020 06:04 PM
Last Updated : 29 Jan 2020 06:04 PM

கரோனா வைரஸ்; வெளியேறும் இந்தியர்கள் பட்டியல் தயார்: வேண்டிய உதவிகளை செய்வோம் - சீனா தகவல்

கரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான வுஹானில் இருந்து வெளியேறும் இந்தியர்களின் பட்டியல் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில் எங்கள் நாட்டிலிருந்து வெளியேறும் வெளிநாட்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வோம் என்று சீனா தெரிவித்துள்ளது.

உலகையே கதிகலங்க வைத்துள்ள கொடிய கரோனா வைரஸின் பாதிப்பினால் சீனாவில் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. ஹூபே மாகாணத்தில் இதுவரையிலான இறப்பு எண்ணிக்கை 132 ஆக உள்ளது.

ஹூபே மாகாணத்தில், கொடிய கரோனா வைரஸ் நோய் தாக்குலின் மையப்பகுதியான வுஹானில் இருந்து இந்தியா தனது குடிமக்களை விமானத்தில் ஏற்றிச் செல்லத் தயாராகி வருகிறது. இதற்காக சீனாவில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியேற்றப்பட வேண்டிய இந்தியர்களின் பட்டியலைத் தொகுத்துள்ளது. இதில் 250 பேரின் பெயர்கள் இருப்பதாகவும் இவர்களில் பெரும்பாலும் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவைத் தவிர, அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட பல நாடுகளும் மத்திய ஹூபே மாகாணம் மற்றும் அதன் தலைநகரான வுஹானில் இருந்து தங்கள் நாட்டினரை விமானத்தில் ஏற்றிச்செல்ல ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன.

இந்திய நாட்டினரை வெளியேற்றுவதற்கான முயற்சிகளை ஒருங்கிணைக்கும் பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகம், வுஹான் மற்றும் ஹூபே மாகாணத்தில் உள்ள இந்தியர்களுக்கான பதிவுப் படிவங்கள் மற்றும் ஒப்புதல் குறிப்புகளை புதன்கிழமை விநியோகித்தது.

சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் தாயகம் திரும்பியவுடன் அவர்கள் ஒரு நியமிக்கப்பட்ட நகரத்தில் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது. அந்நகரத்தின் பெயர் இதுவரை வெளியிடப்படவில்லை.

புதிய வைரஸின் அடைகாக்கும் காலம் சராசரியாக மூன்று முதல் ஏழு நாட்கள் அதிகபட்சம் 15 நாட்கள் என்று வல்லுநர்கள் கூறுவதால் தனிமைப்படுத்தல் அவசியமானது. வுஹானில் உள்ள இந்தியர்களுக்கு நெருக்கடியைச் சமாளிக்க இந்தியத் தூதரகம் மூன்று ஹாட்லைன்களைத் திறந்துள்ளது.

பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நாடுகளைத் தவிர, பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த ஏராளமான வெளிநாட்டிரும் ஹூபே மாகாணத்தில் சிக்கித் தவிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சீன அரசின் நடவடிக்கைகளை அறிந்துகொள்ள, வெளிநாட்டினரை வெளியேற்றுவதை ஒருங்கிணைக்கும் சீன வெளியுறவு அமைச்சககத்தை புதன்கிழமை பிடிஐ தொடர்புகொண்டது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் பிடிஐயிடம் கூறியதாவது:

''வுஹான் மற்றும் ஹூபே மாகாணத்தில் உள்ள அனைத்து நாடுகளின் குடிமக்களின் உயிர்களையும் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பதில் சீனா பெரும் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது. மேலும், அவர்களின் நியாயமான கவலைகள் மற்றும் கோரிக்கைகளைச் சரியான நேரத்தில் தீர்க்கத் தொடர்ந்து தீவிரமான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கும்.

வுஹானில் ஒரு நாடு தனது குடிமக்களை வெளியேற்ற வலியுறுத்தினால், சீனா தகுந்த ஏற்பாடுகளைச் செய்து, சர்வதேச நடைமுறை மற்றும் தொற்றுநோய் தடுப்பு தொடர்பான சீனாவின் பொருத்தமான ஏற்பாடுகளுக்கு ஏற்ப தேவையான உதவிகளையும் வசதிகளையும் வழங்கும்''.

இவ்வாறு சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x