பாகிஸ்தானில் திருமண மண்டபத்தில் இருந்து இந்து மணப்பெண் கடத்தல்: கட்டாய மதம் மாற்றி முஸ்லிம் நபருக்குத் திருமணம்

பாகிஸ்தானில் திருமண மண்டபத்தில் இருந்து இந்து மணப்பெண் கடத்தல்: கட்டாய மதம் மாற்றி முஸ்லிம் நபருக்குத் திருமணம்
Updated on
1 min read

பாகிஸ்தானின் சிந்து மாநிலத்தில் உள்ள மட்டியாரி மாவட்டத்தில் திருமண மண்டபத்தில் திருமணத்துக்காக மணக்கோலத்தில் இருந்து இந்து மணப்பெண்ணை துப்பாக்கி முனையில் கடத்திய மர்ம கும்பல், அவரை முஸ்லிமாக மதம் மாற்றி, அவரை முஸ்லிம் இளைஞருக்குத் திருமணம் செய்து வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரிக்குச் சம்மன் அனுப்பி கண்டித்துள்ளது.

சிந்து மாநிலம், மட்டியாரி மாவட்டம், ஹலா நகரைச் சேர்ந்தவர் கிஷோர் தாஸ். இவரின் மகள் பாரதி பாய் (வயது 24). இவருக்கு கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்க இருந்தது.

திருமண மண்டபத்தில் மணக்கோலத்தில் மணப்பெண் பாரதி பாய் இருந்தபோது, துப்பாக்கியுடன் வந்த சிலர், அவரைக் கடத்திச் சென்றனர். அவரை வலுக்கட்டாயமாக முஸ்லிம் மதத்துக்கு மதம் மாற்றி, ஷாருக் குல் என்பவருக்கு கட்டாயத் திருமணம் செய்துவைத்து அந்தத் திருமணத்தையும் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து பாகிஸ்தானில் உள்ள அனைத்து பாகிஸ்தானிய இந்து கவுன்சில் போலீஸில் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து இந்து கவுன்சில் கூறுகையில், " திருமணக் கோலத்தில் மண்டபத்தில் இருந்த பாரதியை சிலர் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று கட்டமாயமாக முஸ்லிமாக மதம் மாற்றி, முஸ்லிம் ஒருவருக்குத் திருமணம் செய்துவைத்துள்ளார்கள். கடத்தலில் ஈடுபட்டவர்கள் போலீஸ் சீருடையில் இருந்தார்கள் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

பாரதி பாய் பனோரி நகரில் உள்ள ஜமாத் உல் உலூம் இஸ்லாமியாவில் முஸ்லிமாக மதம் மாறியுள்ளார். கடத்திச் செல்லப்பட்ட அவர் கராச்சி நகரில் இருப்பதாகக் கிடைத்த தகவலின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர் " எனத் தெரிவித்தனர்.

கடந்த மாதம் சிந்து மாநிலத்தில் உள்ள ஜாகோபாதாபாத் நகரில் இருந்து 15 வயது நிரம்பிய இந்து சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு முஸ்லிமாக மதம் மாற்றப்பட்டு, முஸ்லிம் இளைஞருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அவர் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். கடந்த 14-ம்தேதி இரு இந்து சிறுமிகள் கடத்தப்பட்டனர்.

பாகிஸ்தானில் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் தொடர்ந்து தாக்கப்படுவது, பெண்கள் கடத்தப்படும் சம்பவம் அதிகரித்து வருவது குறித்து மத்திய அரசு பாகிஸ்தானிடம் வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளது

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in