

இலங்கையில் முதல்முறையாக கரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு உறுதிசெய்யப்பட்டதால், சீனாவில் இருந்து பயணிகள் இலங்கை வந்தபின் விசா பெறும் முறைக்குத் தற்காலிகமாகத் தடை செய்து இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது
சீனாவை அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை சீனாவில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல்வேறு நாடுகளும் சீனாவில் இருந்து வரும் பயணிகளைத் தீவிரமான கண்காணிப்புக்கு உள்ளாக்கியுள்ளன.
இந்த சூழலில் சீனாவில் இருந்து வந்த 40 வயதுப் பெண்ணுக்கு இலங்கையில் மருத்துவப்பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து இலங்கையின் மருத்துவத்துறையின் தொற்றுநோய் பிரிவு தலைவர் சுதாத் சுராவீரா நிருபர்களிடம் கூறுகையில், "சீனாவில் இருந்து கடந்த 19-ம் தேதி இலங்கைக்கு வந்த 40 வயது பெண்ணுக்கு பரிசோதனை நடத்தியதில் அவருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறார்" எனத் தெரிவித்தார்
சீனாவைச் சேர்ந்த பெண்ணுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதியானதைத் தொடர்ந்து, சீனாவில் இருந்து வரும் பயணிகள் இலங்கை வந்து விசா பெற்றுக் கொள்ளும் முறையை ரத்து செய்துள்ளது இலங்கை அரசு.
இலங்கைக்குள் வரும் சீனப் பயணிகள் அனைவரும் மறு அறிவிப்பு வரும் வரை ஆன்-லைன் மூலம் மட்டுமே விசா பெற முடியும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கரோனா வைரஸ் பீதி காரணமாக, இலங்கை விமானநிலையங்களில் விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு இடத்தில் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடும், மருத்துவப்பரிசோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையைச் சேர்ந்த 65 மாணவர்கள் சீனாவில் இருந்து நேற்று கொழும்பு வந்தனர். மற்றொரு விமானம் சீனாவுக்கு அனுப்பப்பட்டு அங்கிருக்கும் மாணவர்களை அழைத்துவரச் சென்றுள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனாவில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
மேலும் கரோனா வைரஸ் பாதிப்பைத் தடுக்கும் வழிகள், பாதுகாப்பு வழிமுறைகள், சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய அதிபர் கோத்தபய ராஜபக்ச சிறப்பு குழு அமைத்துள்ளார்.
சீன சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை முக்கிய சுற்றுலாத் தலமாகும். சீனாவின் உதவியுடன் ஏராளமான திட்டங்கள், கட்டுமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாகத் துறைமுகங்கள், கடற்கரைச் சாலைகள், துறைமுக நகரம் ஆகியவை அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.