

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் அமெரிக்காவில் 30-க்கும் மேற்பட்ட நகரங்களில் இந்தியர்கள் அமைதியான முறையில் குடியரசு தினமான நேற்று பேரணியும், போராட்டமும் நடத்தினர்.
குடியுரிமை சட்டத்தில் மத்திய அரசு செய்துள்ள திருத்தத்தைக் கண்டித்து ஒருதரப்பு இந்தியர்கள் போராட்டம் நடத்திய நிலையில், அந்த போராட்டத்துக்கு எதிராகவும், சிஏஏ-வுக்கு ஆதரவாகவும் மற்றொரு தரப்பு இந்தியர்கள் பேரணி நடத்தி, இந்த சட்டத்தால் சிறுபான்மை மக்களுக்கும், இந்தியர்களுக்கும் எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என்று வலியுறுத்தினர்.
சிஏஏ-வுக்கு எதிராக பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்திய இந்தியர்கள், கையில் சிஏஏ-வுக்கு எதிராகக் கருத்துக்கள் அடங்கிய பதாகைகளையும், பிரதமர் மோடிக்கு எதிரான வாசகங்களையும் எழுதி ஊர்வலமாக வந்தார்கள். சிஏஏ-வை திரும்பப் பெற வேண்டும், மதச்சார்பற்ற இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என வலியுறுத்தினர்.
நியூயார்க், சிக்காகோ, ஹாஸ்டன், அட்லாண்டா, சான் பிரான்சிஸ்கோ, வாஷிங்டன் உள்ளிட்ட நகரங்களில் இந்தியத் தூதரகங்கள் இருக்கின்றன. அவற்றின் முன் இந்தியர்கள் நின்று கொண்டு குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக முழக்கமிட்டனர்.
மற்றொரு புறம் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் துணிச்சலாகக் கொண்டுவந்து நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு வாழ்த்துத் தெரிவித்து ஒரு தரப்பு இந்தியர்கள் கோஷமிட்டனர்.
சிகாகோ நகரில் ஏராளமான இந்தியர்கள் சிஏஏ-வுக்கு ஆதரவாகப் பேரணி சென்று, நீண்ட தொலைவுக்கு மனிதச் சங்கிலி உருவாக்கினர். வாஷிங்டன் நகரில் 500-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பூங்காவில் இருந்து வெள்ளை மாளிகை அருகே இருக்கும் காந்தி சிலை வரை சிஏஏ-வுக்கு ஆதரவாகப் பேரணி சென்று, இந்தியத் தூதரகத்தில் முடித்தனர்.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக 30-க்கும் மேற்பட்ட நகரங்களிலும் நேற்று பேரணி நடந்தது. இந்த பேரணியை இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில், பிஎல்எம்,அமைதிக்கான யூதர்கள் குழு ஆகியவை இணைந்து நடத்தின.
ஹூஸ்டன் நகரில் 150-க்கும் மேற்பட்ட அமெரிக்க இந்தியர்கள் சிஏஏ, என்ஆர்சிக்கு ஆதரவாகப் பேரணி நடத்தி, இந்தியத்தூதரகம் முன் முடித்தனர். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் வசிக்கும் சிறுபான்மை மக்களைக் காக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினார்கள்.இறுதியாக இந்தியத் தூதரகம் முன் இந்திய, அமெரிக்கத் தேசிய கீதங்களைப் பாடி முடித்தனர்.