

பிரபல கூடைப்பந்து வீரர் கோபி ப்ரையன்ட் மறைவுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரர் கோபி ப்ரையன்ட். கூடைப்பந்து விளையாட்டில் 20 ஆண்டுகளாக மாபெரும் ஆளுமையாக திகழ்ந்தவர். ஒலிம்பிக் போட்டிகளில் இரண்டு முறை தங்கப்பதக்கம் வென்றவர்.
இன்று அதிகாலை ப்ரையன்ட் தனது 13 வயது மகள் ஜியானா உட்பட 8 பேருடன் தனியார் ஹெலிகாப்டர் ஒன்றில் தவுசண்ட் ஆக்ஸ் என்னும் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
கடும் பனி மூட்டத்தின் நடுவே கலாபஸாஸ் என்னும் இடத்தில் உள்ள மலைப்பகுதியின் சென்றுகொண்டிருக்கும்போது ஹெலிகாப்டர் திடீரென தீப்பிடித்துக் கொண்டது.
இதில் கோபி ப்ரையன்ட், அவரது 13 வயது மகள் ஜியானா, கூடைப்பந்து பயிற்சியாளர் கிரிஸ்டினா மாஸர் உள்ளிட்ட 9 பேரும் உடல் கருகி உயிரிழந்தனர்.
இதுகுறித்து லாஸ் ஏஞ்சல்ஸ் ஷெரிஃப் ஹெலிகாப்டரில் இருந்த 9 பேரும் இறந்துவிட்டனர் என்பதை உறுதி செய்துள்ளார்.
கோபி ப்ரையன்ட் மரணத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, ஹாலிவுட் நடிகர் லியார்னாடோ டிகாப்ரியோ உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்: வரலாற்றின் மிகச்சிறந்த கூடைப்பந்து வீரராக இருந்தபோதிலும் கோபி ப்ரையன்ட் தற்போதுதான் தன் வாழ்க்கையை தொடங்கினார். தன் குடும்பத்தை மிகவும் நேசித்த அவர் தன் எதிர்காலம் குறித்த வலுவான நம்பிக்கையை கொண்டிருந்தார். அவரது அழகான மகள் ஜியானாவின் இழப்பு இந்த தருணத்தை இன்னும் மோசமானதாக்குகிறது. நானும் மெலனியாவும் எங்களின் ஆழ்ந்த இரங்கலை வனெஸ்ஸாவுக்கும் ப்ரையன்ட்டின் அற்புதமான குடும்பத்துக்கும் தெரிவிக்கிறோம். உங்கள் அனைவருக்கும் துணையாக கடவுள் இருப்பார்.
அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா: கூடைப்பந்தில் ப்ரையன்ட் ஓர் ஆளுமை. அர்த்தமுள்ள ஒரு இரண்டாம் பகுதியை அவர் தற்போதுதான் தொடங்கினார். ஜியானாவின் இழப்பு ஒரு பெற்றோராக எங்கள் இதயத்தை நொறுக்குகிறது. நானும் மிச்செலும் வனெஸ்ஸா மற்றும் ப்ரையன்ட்டின் ஒட்டுமொத்த குடும்பத்தினருக்கும் எங்களின் அன்பையும் பிரார்த்தனைகளையும் தெரிவிக்கிறோம்.
நடிகர் லியார்னாடோ டிகாப்ரியோ: ப்ரையன்ட் ஒரு மிகச்சிறந்த ஆளுமை. அவருடன் உயிரிழந்த அனைவரின் ஆன்மாவும் சாந்தியடையட்டும். அவரது குடும்பத்துக்கு என்னுடைய அன்பையும், அனுதாங்களையும் தெரிவிக்கிறேன். லாஸ் ஏஞ்சல்ஸ் இனி முன்பு போல இருக்காது.
விராட் கோலி: இந்த செய்தியை கேட்பது இந்த நாளை மிகவும் மோசமானதாக்கி விட்டது. அதிகாலையில் சீக்கிரம் விழித்து மைதானத்தில் இந்த மந்திரவாதி செய்யும் என்னை மயக்கக்கூடிய விஷயங்களை பார்ப்பது உள்ளிட்ட ஏகப்பட்ட சிறுவயது நினைவுகள். வாழ்க்கை கணிக்கமுடியாததாகவும், நிலையற்றதாகவும் இருக்கிறது. விபத்தில் அவரது மகள் ஜியானாவும் உயிரிழந்துள்ளார். நான் மிகவும் மனமுடைந்து போயிருக்கிறேன். ஆன்மா சாந்தியடையட்டும்.
ஜஸ்டின் பீபர்: இது நடந்திருக்க கூடாது. நீங்கள் எப்போதும் என்னை ஊக்கப்படுத்தினீர்கள் மாம்பா. இன்று வரை புன்னகை வரவழைக்கும் பல சிறந்த வார்த்தைகளை எனக்கு கூறியுள்ளீர்கள். நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன்.
ரோஹித் ஷர்மா: விளையாட்டு உலகில் இது ஒரு சோகமான நாள். கூடைப்பந்தின் மிகப்பெரிய ஆளுமைகளில் ஒருவன் மிக விரைவில் போய் விட்டார். கோபி ப்ரையன்ட், அவரது மகள் ஜியானா மற்றும் உயிரிழந்த அனைவரின் ஆன்மாக்களும் சாந்தியடையட்டும்.
கிறிஸ்டியனோ ரொனால்டோ: கோபி மற்றும் அவரது மகள் ஜியானாவின் மரணச் செய்தி இதயத்தை நொறுக்குவதாக இருக்கிறது. அவர் ஒரு உண்மையான ஆளுமையாகவும் பலருக்கு முன்மாதிரியாகவும் இருந்தார். அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், விபத்தில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் என்னுடைய இரங்கலை தெரிவிக்கிறேன். ஆளுமையின் ஆன்மா சாந்தியடையட்டும்.
இவ்வாறு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.