Published : 25 Jan 2020 07:20 AM
Last Updated : 25 Jan 2020 07:20 AM

தமிழக மாணவிக்கு கனடாவில் கத்திக் குத்து: குடும்பத்தினருக்கு உதவ அரசு உத்தரவு

ரேச்சல் ஆல்பர்ட்

டொரன்டோ

தமிழகத்தின் நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்தவர் ரேச்சல் ஆல்பர்ட் (23). இவர் கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்தார். கடந்த 22-ம் தேதி இரவு 10 மணி அளவில் பல்கலைக்கழக வளாகத்தில் அவர் நடந்து சென்றபோது மர்ம நபர் ஒருவர் அவரை கத்தியால் பலமுறை குத்தினார்.

தகவலறிந்த டொரன்டோ நகர போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் மாணவி சிகிச்சை பெறுகிறார். அவரை கத்தியால் குத்திய மர்ம நபரை தீவிரமாக தேடி வருகிறோம்” என்று தெரிவித்தனர்.

மாணவியின் சகோதரி டாக்டர் ரெபெக்கா கூறும்போது, “கனடாவில் எனது அக்கா உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். கழுத்துப் பகுதியில் கத்திக் குத்து காயம் ஏற்பட்டிருப்பதால் மூளைக்கு செல்லும் நரம்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. கனடா செல்வதற்கான விசா நடைமுறைகள் குழப்பமாக உள்ளன. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் உதவி கோரியுள்ளோம்” என்றார்.

அமைச்சர் உத்தரவு

மாணவி ரேச்சலின் குடும்பத்தினர் ட்விட்டர் வாயிலாக வெளியுறவு அமைச்சரிடம் உதவி கோரினர். இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் ஜெய்சங்கர், “இந்திய மாணவி மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் விசா பெற உதவுமாறு வெளியுறவு துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்றார். மாணவியின் குடும்பத்தினர் வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்ணையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x