

கரோனா வைரஸ் பாதிப்புப் பகுதியிலிருந்து வந்துள்ளவர்கள் வீட்டிலேயே இரு வாரங்கள் தங்க வேண்டும் என்று பெய்ஜிங் அரசு வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டபோது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
தற்போது, கரோனா வைரஸ் சீனாவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இதுவரை இவ்வரைஸுக்கு சீனாவில் 25 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 835 பேருக்கு வைரஸ் தாக்குதல் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சீனா முழுவதும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், நோய் பரவலைத் தடுக்க சீனாவில் 10 நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. கோயில்கள் போன்ற பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் நோய் பரவலைத் தடுக்க கரோனா வைரஸ் பாதிப்புப் பகுதியிலிருந்து வந்தடைந்த மக்கள், தங்கள் வீட்டிலேயே 14 நாட்கள் தங்குமாறு பெய்ஜிங் அரசு வலியுறுத்தியுள்ளது.
சீனா மட்டுமல்லாமல் தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது குறிப்பிடத்தக்கது.