

ஏமனில் எம்.பி. ஒருவர் இல்லத்தில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 3 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அரப் நியூஸ் வெளியிட்ட செய்தியில், ''ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மரிப் மாகாணத்தில் அமைந்துள்ள எம்.பி. மொசத் ஹுசைன் இல்லத்தில் வான்வழித் தாக்குதல் நடத்தினர். இதில் ஹுசைனின் மருமகள் மற்றும் 2 பேரக் குழந்தைகள் பலியாகினர். ஹுசைனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது.
இத்தத் தாக்குதலுக்கு சவுதி கண்டனம் தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டில் சனாவிலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மத்திய மாகாணமான மரிப். இங்குள்ள ராணுவ முகாமைச் சேர்ந்த வீரர்கள் மசூதி ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென வான்வழி மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 70 ஏமன் வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் இத்தாக்குதலை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தி உள்ளனர்.
தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.