Last Updated : 23 Jan, 2020 01:55 PM

 

Published : 23 Jan 2020 01:55 PM
Last Updated : 23 Jan 2020 01:55 PM

விஷம் கக்கும் வார்த்தை; சூழல் அறியா வெறுப்புப் பேச்சு: காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு ஐ.நா.வில் இந்தியா பதிலடி

பாகிஸ்தான் தொடர்ந்து விஷம் கக்கும் வார்த்தைகளையும், தவறான விளக்கங்களையுமே பேசி வருகிறது. சூழல் அறியாமல் வெறுப்புணர்வுடன் பேசுகிறது என்று ஐ.நா.வில் இந்தியா கடுமையாகச் சாடியது.

ஐ.நா.வின் ஒவ்வொரு கூட்டத்திலும் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் தொடர்ந்து எழுப்பி வருகிறது. ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக ஐ.நா.வில் எந்தவிதமான ஆதரவுக் குரல்களும் எழவில்லை.

கடந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் குறித்து பாகிஸ்தான் எழுப்பியது. அதற்குச் சீனாவும் ஆதரவு அளித்தது. ஆனால் பாதுகாப்பு கவுன்சிலில் எந்தவிதமான ஆதரவும் பாகிஸ்தானுக்குக் கிடைக்கவில்லை.

இந்நிலையில் ஐ.நா.வின் ஆண்டுச் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பாகிஸ்தானின் பிரதிநிதி சாத் அகமது வாரியாச் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை எழுப்பிப் பேசினார். அப்போது எந்த சூழலிலும் காஷ்மீர் விவகாரத்தில் ஐ.நா. தனது பொறுப்புகளைக் கைவிடக்கூடாது என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி கே.நாகராஜ் நாயுடு பேசினார். அவர் கூறுகையில், " உண்மையான சூழலைச் சர்வதேச சமூகம் அறியவிடாமல் தெளிவற்ற தன்மையையும், குழப்பத்தையும் பாகிஸ்தான் உருவாக்கி வருகிறது. இரு தரப்பு உறவுகளையும் சீரமைக்க நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, போர் செய்வதற்கான விருப்பத்தையும், கசப்பான விமர்சனங்களையும் வலுக்கட்டாயமாகப் பேசி வருகிறது.

உண்மையான சூழலை அறியாமல் பாகிஸ்தான் பிரதிநிதி தொடர்ந்து வெறுப்புப் பேச்சுகளைப் பேசி வருகிறார். ஒவ்வொரு முறையும் பாகிஸ்தான் பிரதிநிதி பேசும்போதும், விஷம் கக்கும் வார்த்தைகளையும், பொய்யான விவரிப்புகளையும் எடுத்துக்கூறுகிறார்.

இது உண்மையிலேயே மிகவும் வியப்பாக இருக்கிறது. பாகிஸ்தான் தங்கள் நாட்டிலுள்ள சிறுபான்மையினரை முற்றிலும் அழிக்கும் செயலில் இறங்கிவிட்டு, சிறுபான்மையினரைப் பாதுகாக்கும் விஷயத்தைப் பற்றிப் பேசுகிறது. பாகிஸ்தான் போலித்தனத்தையும், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகப் பொய்யான தோற்றத்தை வெளிப்படுத்தி திசை திருப்புகிறது. பாகிஸ்தானின் பொய்யான வார்த்தை ஜாலங்களை யாரும் காது கொடுத்துக் கேட்கமாட்டார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அது தன்னுடைய இயல்பான நிர்வாக ரீதியான பணிகளுக்குத் திரும்புவது அவசியம்" என்று நாகராஜ் நாயுடு தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x