

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் போனை சவுதி ஹேக் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஜெஃப் பெசோஸ் உலகப் பணக்காரப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அமேசான் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டின் நிறுவனரான ஜெஃப் பெசோஸின் வாட்ஸ் அப்பிற்கு 2018 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சவுதி இளவரசர் சல்மானிடமிருந்து ரகசியக் கோப்பு ஒன்று அனுப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது போன் ஹேக் செய்யப்பட்டது என்று கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் ஜெஃப் பெசோஸால் நியமிக்கப்பட்ட தொழில்நுட்ப நிபுணர்கள், ஹேக் செய்யப்பட்டதின் பின்னணியில் சவுதி இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வ அறிவிபை ஜெஃப் பெசோஸ் தரப்பிலிருந்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஆனால், தனது ட்விட்டர் பக்கத்தில் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமாலின் நினைவிடத்திற்குச் சென்ற புகைப்படத்தை சவுதி மீதான குற்றச்சாட்டிற்கு பிறகு ஜெஃப் பதிவிட்டுள்ளார்.
துருக்கி தூதரகத்தில் சவுதி அதிகாரிகளால் கொல்லப்பட்ட சவுதி பத்திரிகையாளர் ஜமால், வாஷிங்டன் போஸ்ட்டில் சவுதி அரசைக் கண்டித்தும், சவுதி இளவரசர் சல்மானை விமர்சித்தும் தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வந்தார். இந்தக் கொலையில் சவுதி இளவரசருக்குத் தொடர்பு உள்ளது என்று ஆதாரங்களுடன் துருக்கி நிரூபிக்க, அதனை முற்றிலுமாக சவுதி மறுத்தது.
இந்த நிலையில் வாஷிங்டன் போஸ்ட் நிறுவனரான ஜெஃப் பெசோஸின் வாட்ஸ் அப் நம்பருக்கு ஜமால் கொல்லப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்னர், சவுதி இளவரசர் சல்மானிடமிருந்து காரணமே இல்லாமல் கோப்பு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது போனிலிருந்த பல ரகசியப் புகைப்படங்கள், பல முக்கியத் தகவல்கள் திருடப்பட்டதாக வலுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டில் உண்மை இல்லை என்று சவுதி தரப்பு மறுத்துள்ளது.