

சீனாவில் வுஹான் நகரில் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் காரணமாக, அந்த நகருக்குச் செல்ல அனைவருக்கும் சீனா அரசு தடை விதித்துள்ளது..
அந்த நகருக்குச் செல்லும் அனைத்து விதமான போக்குவரத்துகளும் தடை செய்யப்பட்டுள்ளன. விமானங்கள் அங்கிருந்து புறப்படவும், செல்லவும் சீன அரசு தடை விதித்துள்ளது.
வுஹான் நகரில் கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 17 பேர் பலியாகியுள்ளனர். பாதிக்கப்பட்ட 571 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மத்திய சீன நகரமான வுஹான் நகரில்தான் முதன் முதலாக கரோனா வைரஸ் காய்ச்சல் கண்டறியப்பட்டது. சீனா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் அந்த வைரஸ் ஆசியாவின் இதர நாடுகளுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.
கடந்த 2002-2003 இல் சீனா மற்றும் ஹாங்காங்கில் சார்ஸ் வைரஸ் வேகமாகப் பரவியதன் காரணமாக 650 பேர் உயிரிழந்தனர். தற்போது, அதேபோன்றதொரு வைரஸ் சீனா முழுக்கப் பரவியுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் சந்திரப் புத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் உலகிலிருந்து லட்சக்கணக்கானோர் சீனாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், கரோனா வைரஸ் காய்ச்சல் பரவி வருவதும், இது ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவும் என்று தெரியவந்திருப்பதும் சீனா சுகாதாரத் துறையினரின் பயத்தை மேலும் அதிகரித்துள்ளது.
வியன்னா நகரில் உலக சுகாதார அமைப்பு அவசரக் கூட்டத்தை நேற்று நடத்தியது. உலக அளவில் கரோனா வைரஸ் தாக்கம் எதிர்காலத்தில் இருக்குமா, அதைக் கட்டுப்படுத்துவது குறித்தும், சீனா சுகாதாரத் துறைக்குத் தேவையான உதவிகள் வழங்குவது குறித்தும் நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், சீனாவில் சுகாதார அவசர நிலையை அறிவிக்கலாமா அதாவது எபோலா, ஸ்வைன் ப்ளூ வைரஸ் போன்று கரோனா வைரஸையும் அறிவித்து உலக நாடுகளின் உதவியைக் கோரலாமா என்று ஆலோசிக்கப்பட்டது.
சீனாவில் நாளை (24-ம்தேதி) புத்தாண்டு பிறப்பதையொட்டி உலகெங்கும் உள்ள சீன மக்கள் தாய்நாட்டுக்கு வந்தவண்ணம் உள்ளார்கள். அதேபோல சீனாவில் இருந்து உலகின் பல நாடுகளுக்கும் செல்கின்றனர். இதனால், சீனாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் செல்லும் மக்கள் கூர்ந்து கவனிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த கரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 17 பேர் உயிரிழந்துவிட்டனர். 571பேருக்கு வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று சீனா சுகாதாரத்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் வுஹான் நகரம் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்தான் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சீனாவில் படித்து வருகின்றனர். அவர்கள் தாங்கள் தங்கி இருக்கும் இடத்தில் இருந்து எங்கும் பயணிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த கரோனா வைரஸ் ஷாங்காய் நகரிலும் பரவியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கரோனா வைரஸால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட வுஹான் நகருக்கு பேருந்துப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து, விமானப் போக்குவரத்தையும் ரத்து செய்துள்ளது சீன அரசு. இந்த நகரில் இருந்து எந்தப் போக்குவரத்தும் வெளி மாநிலங்களுக்குச் செல்லவும், அங்கிருந்து இங்கு உள்ளே வரவும் தடை செய்யப்பட்டுள்ளது.
வெளியே செல்லும் மக்கள் முகத்தில் சுவாசக் கவசம் அணிந்து செல்லவும் சீன சுகாதாரத்துறை அணையம் அறிவுறுத்தியுள்ளது.
சீனா சுகாதாரத்துறையின் இணையமைச்சர் லீ பின் கூறுகையில், "வுஹான் நகரில் காரோனா வைரஸ் வேகமாக பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வுஹான் நகரம் அமைந்துள்ள ஹூபி மாநிலத்தில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன.
வுஹான் நகரில் உள்ள மக்கள் பொது இடங்களான ஹோட்டல், ரெஸ்டாரன்ட், திரையரங்குகள், பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள், பேருந்துகளில் செல்லும்போது சுவாசக் கவசத்தை அணிந்து செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வுஹான் நகரில் மட்டுமல்லாது, ஷான்ஸி, புஜியான், குஜோ, ஹீபி, நிங்ஸியா ஹு ஆகிய நகரங்களுக்கும் பரவியுள்ளது. ஹாங்காங், மக்காவு நகரிலும் இந்த வைரஸ் பரவியுள்ளது " எனத் தெரிவித்தார்.
ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் கரோனா வைரஸால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவலும் வந்துள்ளது.
மேலும், சீனாவில் உள்ள உள்ளூர் சுற்றுலா ஏஜென்ஸிகள் வரும் பிப்ரவரி 8-ம் தேதி வரை எந்தவிதமான சுற்றுலா திட்டங்களையும் எங்கும் செயல்படுத்தக்கூடாது. மக்களை எங்கும் அழைத்துச் செல்லக்கூடாது என்று சீன அரசு உத்தரவிட்டுள்ளது.