

இராக்கில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்களில் 10 பேர் பலியாகினர்.
இதுகுறித்து இராக் மனித உரிமை அமைப்புகள் கூறும்போது, “இராக்கில் பாக்தாத் பஸ்ரா, நசிரியாஹ் ஆகிய நகரங்களில் அரசுக்கு எதிராக போரட்டங்கள் நடந்தன. சாலை மறியல், டயர்களை எரித்தல் போன்ற நடவடிக்கைகளிலும் போராட்டக்காரர்கள் இறங்கினர். இதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் போராட்டக்காரர்கள் 10 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். 88 பேர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டனர்” என்று தெரிவித்துள்ளது.
இராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் ஆதில் அப்துல் மஹ்திக்கு எதிராக சில மாதங்களுக்கு மேலாகப் போராட்டம் தொடர்ந்து வருகிறது. அரசுக்கு எதிரான இப்போராட்டத்தில் ஈடுபட்டவரகளில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.
இராக்கில் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் 300க்கு அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். ஆயிரக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இராக்கில் நடக்கும் போராட்டத்தை அமெரிக்கா தூண்டி விடுகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.