

சீனாவிலிருந்து பரவும் கொடிய வைரஸான கரோனா வைரஸ் தற்போது அமெரிக்காவுக்கும் பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்க சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், ”சீனாவின் வுகன் நகரிலிருந்து பரவிய வைரஸ் அறிகுறிகள் தற்போது அமெரிக்காவில் ஒருவருக்கு கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் தாக்கம் கண்டறியப்பட்டுள்ள நபர் சியாட்டில் வசிந்து வந்துள்ளார். அவர் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருகிறார்” என்று தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க விமான நிலையங்களில் கரோனா வைரஸ் கண்காணிப்பு பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மக் காய்ச்சல் காரணமாக இருவர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட போது, அவர்களுக்கு ‘கரோனா' வைரஸ் பாதிப்பு இருந்தது தெரியவந்தது.
இவ்வைரஸ் காரணமாக சீனாவில் இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும், சீனாவில் 300க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா வைரஸ் தாக்கத்துக்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன.
கரோனா வைரஸ் தாக்குதலால் சுவாசக் கோளாறு, அதிகப்படியான காய்ச்சல் ஆகியவை ஏற்படுகிறது. முதலில் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கும், பின்னர் மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கும் இவ்வைரஸ் பரவும் தன்மை கொண்டது.
சீனா மட்டுமல்லாமல் தென்கொரியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இவ்வைரஸ் பரவிய நிலையில் தற்போது அமெரிக்காவுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது.