Last Updated : 24 Aug, 2015 06:42 PM

 

Published : 24 Aug 2015 06:42 PM
Last Updated : 24 Aug 2015 06:42 PM

அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தானுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்ள தெரியும்: சர்தாஜ் அஜீஸ்

அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தானுக்கு தன்னை பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று தெரியும் என்று அந்நாட்டு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சர்தாஜ் அஜீஸ் கூறியுள்ளார்.

பாகிஸ்தானின் ‘டான்’ நாளேட்டுக்கு சர்தாஜ் அஜீஸ் ஞாயிறன்று அளித்த பேட்டி திங்களன்று வெளியாகியுள்ளது. இதில் அவர் கூறியிருப்பதாவது:

பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களை இந்தியாவின் உளவு அமைப்பு (ரா) ஊக்குவித்து வருவதற்கான ஆதாரங்கள் எங்களிடமும் உள்ளன. இவ்வாறு ஆதாரங்கள் இருப்பதால் பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரத்தில் மட்டும் இந்தியா ஈடுபட்டுள்ளது. எங்களிடம் ஆதாரங்களை தருவதை விட பாகிஸ்தானுக்கு எதிரான பிரச்சாரம் இந்தியர்களுக்கு மிகவும் முக்கியம். நிபந்தனைகளுடன் கூடிய சுமூக உறவை இந்தியா விரும்புகிறது. வர்த்தகம், தொடர்புகள் தவிர பாகிஸ்தானுடன் மற்ற விஷயங்களை பேச இந்தியாவுக்கு விரும்பம் இல்லை.

இந்தியாவுக்கு காஷ்மீர் ஒரு பிரச்சினை இல்லையென்றால் அங்கு ஏன் 7 லட்சம் துருப்புகளை நிறுத்தியுள்ளனர்?

காஷ்மீர் மக்கள் தங்கள் எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ளும் வகையில் அங்கு இந்தியா பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். தற்போதைய சம்பவங்களுக்கு பிறகு இந்தியா தனது தந்திரங்கள் பலிக்காது என்பதை உணர வேண்டும். பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையில் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும்.

நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா பிராந்திய வல்லரசு போல் செயல்பட்டால், அணு ஆயுதம் கொண்ட பாகிஸ்தானுக்கு தன்னை எப்படி காத்துக்கொள்வது என்று தெரியும்.

இவ்வாறு சர்தாஸ் அஜீஸ் கூறினார்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் அளவிலான பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் நேற்று ரத்து செய்தது. காஷ்மீர் பிரிவினைவாதிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதாலும் காஷ்மீர் உள்ளிட்ட பிற பிரச்சினைகளையும் விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததாலும் இந்தப் பேச்சுவார்த்தையை பாகிஸ்தான் ரத்து செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x