Last Updated : 21 Jan, 2020 05:07 PM

 

Published : 21 Jan 2020 05:07 PM
Last Updated : 21 Jan 2020 05:07 PM

கேரள சுற்றுலாப் பயணிகள் 8 பேர் நேபாள ஹோட்டலில் மர்ம மரணம்: வாயுக் கசிவு காரணமா? இரு குடும்பத்தினர் உயிரிழந்த பரிதாபம்

நேபாளத்துக்குச் சுற்றுலா சென்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 15 பேரில் 4 குழந்தைகள் உள்பட 8 பேர் ஹோட்டல் அறையில் மர்மமாக உயிரிழந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹோட்டல் அறையில் ஹீட்டர்களுக்குப் பயன்படுத்தப்படும் வாயுக்களில் ஏதேனும் கசிவு ஏற்பட்டு மூச்சுத்திணறலில் 8 பயணிகளும் இறந்திருக்கலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இறந்தவர்கள் அனைவரும் இரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மாகவன்பூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி. சுஷில் சிங் ரத்தோர் கூறுகையில், "கேரளாவைச் சேர்ந்த 15 பேர் நேபாளத்தின் போகாரா பகுதிக்குச் சுற்றுலா வந்தனர். அவர்கள் சுற்றுலாவை முடித்துவிட்டு, மீண்டும் கேரளாவுக்குப் புறப்பட்டனர்.

அப்போது, மகாவன்பூர் மாவட்டத்தில் உள்ள டாமன் நகரில் ஒரு தனியார் விடுதியில் நேற்று இரவு தங்கினர். 15 பேருக்கும் சேர்த்து 2 அறைகள் எடுக்கப்பட்டன. ஒரு அறையில் 8 பேரும், மற்றொரு அறையில் 7 பேரும் தங்கினர்.

ஆனால், இன்று காலையில் அந்த அறையில் தங்கி இருந்த 8 பேரும் சுயநினைவில்லாமல் இருந்தனர். உடனடியாக அவர்கள் 8 பேரையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் 8 பயணிகளும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் இரு தம்பதிகளும் அவர்களின் 4 குழந்தைகளும் அடங்கும். அவர்கள் பிரபின் குமார் நாயர் (39), சரண்யா (34), ரஞ்சித் குமார் (39), இந்து ரஞ்சித் (34), ஸ்ரீ பத்ரா (9), அபினவ் சரண்யா நாயர் (9), அபி நாயர் (7), வைஷ்னவ் ரஞ்சித் (2) ஆகியோர் என அடையாளம் தெரிந்தது.

இரவு நேரத்தில் அதிகமான குளிர் இருந்தது என்பதால், வாயு மூலம் அறையைச் சூடாக்கும் ஹீட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த வாயுக் கசிவால் இறந்திருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அனைத்துக் கதவுகளும் உள்பக்கம் பூட்டப்பட்டதால், காற்று அறைக்குள் செல்லவும், வெளியேறவும் வழியில்லாததால், மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம்.

இந்தியர்கள் அனைவரும் ஹாம்ஸ் மருத்துவமனையில் இருந்து விமானம் மூலம் அனுப்பி வைக்கத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன" எனத் தெரிவித்தார்.

கேரள மாநில சுற்றுலாப் பயணிகள் 8 பேர் இறந்தது குறித்து முதல்வர் பினராயி விஜயன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவரும் மத்திய வெளியுறவு இணையமைச்சருமான வி. முரளிதரன் கூறுகையில், " நேபாளத் தூதரகத்திடம் பேசி கேரளப் பயணிகள் 8 பேரின் உடல்களையும் கொண்டுவர இந்திய அரசு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. காத்மாண்டு நகரில் உள்ள இந்தியத் தூதரகத்திடம் தொடர்ந்து பேசி வருகிறோம். இந்தியத் தூதரகத்தில் பணிபுரியும் மருத்துவர்களும் மருத்துவமனைக்குச் சென்று உயிரிழந்த காரணம் குறித்து ஆய்வு செய்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x