Published : 21 Jan 2020 04:00 PM
Last Updated : 21 Jan 2020 04:00 PM

இலங்கை போரில் காணாமல் போனவர்கள் உயிருடன் இல்லை: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச

இலங்கை போரில் காணாமல் போன ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் மரணமடைந்துவிட்டதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரில் காணாமல் போனவர்கள் குறித்து முதன்முதலாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பேசியுள்ளார்.

இதுகுறித்து இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த ஐ.நா. பிரதிநிதிகள் உடனான சந்திப்பில் இதனை அவர் கூறியுள்ளார்.

இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்ட தகவலில் , ''மாயமானவர்கள் அனைவரும் மரணித்துவிட்டனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் விடுதலைப் புலிகளால் அழைத்துச் செல்லப்பட்டனர். இதற்கு அவர்களது குடும்பங்களே சான்று. ஆனால், அவர்களுக்கு என்ன ஆனது என்ற தகவல் குடும்பத்தினருக்குத் தெரியவில்லை. இதன் காரணமாக அவர்கள் மாயமானதாகக் கூறுகின்றனர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிடிஐ வெளியிட்ட செய்தியில், “அரசாங்கத் தகவலின்படி கடந்த 30 ஆண்டுகளாக நடந்த இலங்கை உள்நாட்டுப் போரில் காணாமல் போனவர்களில் 20,000 பேர் மரணமடைந்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் இவர்களுக்கு இறப்புச் சான்றிதழ் விரைவில் வழங்க இருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்றபோது அந்நாட்டின் பாதுகாப்புச் செயலாளராக கோத்தபய ராஜபக்ச இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை போர்

இலங்கையில் 2009-ம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் ராஜபக்ச அரசின் உத்தரவின் பேரில் ஏராளமான அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் கொன்று குவித்ததாக சர்வதேச தமிழ் அமைப்புகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும், ராணுவத்தினர் தமிழ்ப் பெண்களைப் பலாத்காரம் செய்ததாகவும், பலரைத் துன்புறுத்திக் கொன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x