உலக அளவில் வேலையின்மை 2020-ம் ஆண்டில் 25 லட்சம் கூடுதலாக அதிகரிக்கும்: ஐ.நா. கணிப்பு

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
2 min read

2020-ம் ஆண்டில் உலக அளவில் வேலையின்மையின் எண்ணிக்கை 25 லட்சம் கூடுதலாக அதிகரிக்கும். 50 கோடிக்கும் மேலான மக்கள் குறைந்த ஊதியத்துக்கே பணியாற்றுவார்கள் அல்லது பணிக்கு ஏற்ற ஊதியம் பெறாமல் இருப்பார்கள் என்று ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டில் உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகச் சூழல் கண்ணோட்டம் (டபிள்யுஇஎஸ்ஓ) அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

உலக அளவில் வேலையின்மை அளவு என்பது கடந்த 9 ஆண்டுகளாக நிலையாகவே இருந்து வருகிறது.ஆனால், உலகப் பொருளாதார வளர்ச்சி அளவு குறைவாகவே இருந்து வருகிறது. உலக அளவில் தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், அதற்கு ஏற்றார்போல் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவில்லை.

சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ஐஎல்ஓ) கணித்துள்ளபடி 2020-ம் ஆண்டில் உலக அளவில் வேலையின்மையின் அளவு 25 லட்சம் கூடுதலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சதாராண மக்கள் தங்கள் ஊதியத்தின் மூலம் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்திக் கொள்ள மிகவும் சிரமப்படுவார்கள்.

தொடர்ச்சியான மற்றும் கணிசமான வேலை தொடர்பான சமத்துவமின்மை, வெளியேற்றம் ஆகியவை நல்ல திருப்திகரமான ஊதியத்துக்கு ஏற்ற பணியையும், நல்ல எதிர்காலத்தை அமைத்துக்கொள்வதிலும் தடையாக இருக்கின்றன.

உலக அளவில் வேலையில்லாமல் 18.80 கோடி மக்கள் வாழ்கிறார்கள். கூடுதலாக 16.5 கோடி மக்கள் தாங்கள் பார்க்கும் வேலைக்கு ஏற்ற ஊதியம் இல்லாமல் வேலையில் இருக்கிறார்கள். 12 கோடி மக்கள் தீவிரமாக வேலை தேடுவதைக் கைவிட்டுவிட்டார்கள் அல்லது தொழிலாளர் சந்தையை அணுக முடியாமல் உள்ளனர். ஒட்டுமொத்தமாக 47 கோடி மக்கள் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனவரி மாதம் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், வளர்ந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறைவாகவும், சில ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதார வளர்ச்சி தேக்கமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளைவால் புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கம் போதுமானதாக இல்லை. சந்தைக்குள் வேலைதேடி வரும் தொழிலாளர்களை வேலையில் அமர்த்திக்கொள்ளும் திறனும் இல்லாமல் இருக்கிறது. பல ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள மக்கள் வருமானத்தை இழந்து, வறுமையில் சிக்கி வருகிறார்கள்.

வளர்ந்து வரும் நாடுகளில் 2020-21 ஆம் ஆண்டில் தீவிரமான அல்லது உழைக்கும் மக்களிடையே வறுமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2030-ம் ஆண்டுக்குள் வறுமையை ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்துக்கு பல்வேறு இடர்ப்பாடுகள் வரக்கூடும்.

பாலினம், வயது, வாழிடம் தொடர்பான சமத்துவமின்மை தொடர்ந்து அதிகரித்து வேலைவாய்ப்புச் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும். 15 முதல் 24 வயதுக்குள் இருக்கும் 26.70 கோடி மக்களுக்கு வேலையில்லை, கல்வியில்லை, போதுமான பயிற்சி இல்லை, தரமான வேலைச்சூழல் இல்லாமல் இருக்கின்றனர்''.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in