

தளபதி சுலைமானைக் கோழைத்தனமாகக் கொன்ற அமெரிக்காவைப் பழிவாங்குவோம் என்று ஈரான் புரட்சிப் படைத் தளபதி இஸ்மாயில் கானி தெரிவித்துள்ளார்.
ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் அமெரிக்காவால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, துணை தளபதியான இஸ்மாயில் கானி அப்பதவியை ஏற்றார். இந்நிலையில் சுலைமான் கொல்லப்பட்டதற்கு நிச்சயம் அமெரிக்காவைப் பழிவாங்குவோம் என்று படை அறிமுக விழாவில் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இஸ்மாயில் கானி கூறும்போது, “தளபதி சுலைமானை அமெரிக்கா கோழைத்தனமாகக் கொன்றுள்ளது. கடவுளின் ஆசிர்வாதத்தாலும் சுலைமானின் ரத்தத்திற்குப் பழிவாங்க விரும்புபவர்களின் முயற்சிகளாலும் எதிரிகள் நிச்சயம் பழிவாங்கப்படுவார்கள்’’ என்றார்.
முன்னதாக, இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைத் தாக்கினர்.
அதற்குப் பதிலடியாக பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது.