

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் பாலம் ஒன்று சரிந்து விழுந்ததில் 9 பேர் பலியாகினர். ஒருவர் மாயமானார்.
இதுகுறித்து இந்தோனேசிய அதிகாரிகள் கூறும்போது, “இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் தென் பகுதியில் உள்ளது பெங்குலு மாகாணம். இங்கு ஆற்றில் புதிதாகக் கட்டப்பட்ட பாலத்தை மாணவர்கள் கடக்கும்போது பாலம் திடீரென எதிர்பாராமல் சரிந்து விழுந்தது.
இதில் 10 பேர் ஆற்றில் நீந்திக் கரையை அடைந்தனர். ஆனால் சிலர், ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 9 பேர் பலியாயினர். ஒருவர் மாயமானார். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளனர்.
ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் சிலர் மீட்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிகப்படியான எடை காரணமாக பாலம் இடிந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.