

போர் நிறுத்த ஒப்பந்தத்தை சிரிய அரசு மீறுவதாக துருக்கி அதிபர் எர்டோகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து துருக்கி அதிபர் எர்டோகன் கூறும்போது, “சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியில் சிரிய அரசு நடத்திய தாக்குதலில் 20 பேர் பலியாகினர். சிரிய அரசு தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது” என்றார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இட்லிப் பகுதியில் போர் நிறுத்தம் ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டது. எனினும், தொடர்ந்து வன்முறைகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் மிகுந்த பாதிப்படைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, கடந்த ஆண்டு துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
சிரியா மீதான தாக்குதல் காரணமாக துருக்கி மீதான விமர்சனத்தை உலக நாடுகள் முன் வைத்தது குறிப்பிடத்தக்கது.