

உக்ரைன் பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக்கின் ராஜினாமாவை அந்நாட்டு அதிபர் நிராகரித்துள்ளார்.
உக்ரைனில் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கு பொருளாதாரத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று பிரதமர் ஒலெக்ஸி ஹான்சருக் பேசிய ஆடியோ இந்த வாரம் வெளியானது. இந்த ஆடியோவால் உக்ரைன் அரசியலில் சர்ச்சை வெடித்தது.
இதனைத் தொடர்ந்து தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக ஒலெக்ஸி ஹான்சருக், அதிபர் அலுவலகத்தில் கடிதத்தையும் அளித்தார். மேலும், ஆடியோ செயற்கையானது என்றும் அதில் உண்மை இல்லை என்றும் அவர் தொடர்ந்து கூறி வந்தார்.
இந்நிலையில் உக்ரைன் அதிபர், ஒலெக்ஸி ஹான்சருக்கின் ராஜினாமா கடிதத்தை நிராகரித்துள்ளார். இதுகுறித்து அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அதிபர், “நான் உங்களுக்கும் உங்கள் அரசுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்க விரும்புகிறேன். நாட்டை அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாவும் அசைப்பதற்கான நேரம் இதுவல்ல” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆடியோ யாரால் பதிவு செய்யப்பட்டது என்றும் இதனை யார் வெளியிட்டார்கள் என்று விசாரணை செய்யவும் உக்ரைன் அதிபர் உத்தரவிட்டுள்ளார்.