Last Updated : 18 Jan, 2020 03:55 PM

 

Published : 18 Jan 2020 03:55 PM
Last Updated : 18 Jan 2020 03:55 PM

சீனாவிலிருந்து வரும் விமானப் பயணிகளுக்கு தீவிர மருத்துவப் பரிசோதனை: உயிரைக் கொல்லும் மர்ம வைரஸ் அச்சத்தில் அமெரிக்க அதிகாரிகள்

இரண்டு பேரை பலிவாங்கியுள்ள உயிருக்கு ஆபத்தான கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சார்ந்த சார்ஸ் வைரஸ் காரணமாக சீனாவின் முக்கிய நகரம் ஒன்றிலிருந்து நேரடியாக அமெரிக்காவுக்கு விமானத்தில் செல்லும் பயணிகள் மருத்துவ உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவில் மர்மமான வைரஸ் தாக்குதல் காரணமாக இதுவரை 45 பேர் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) அதிகாரி நான்சி மெசொன்னியர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''சீனாவின் வுஹானில் இருந்து அமெரிக்கா செல்லும் பயணிகள் சான் பிரான்சிஸ்கோ, நியூயார்க்கின் ஜே.எஃப்.கே மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய மூன்று விமான நிலையங்களில், புதிய கொரோனா வைரஸுடன் தொடர்புடைய அறிகுறிகளுக்கான மருத்துவத்துறையின் ஸ்கேனிங் உடல் பரிசோதனைக்குப் பின்னரே வெளியே அனுமதிக்கப்படுகிறார்கள்.

பரிசோதனை செய்யப்படும் பயணி, அடுத்த படம் மிகவும் கடும் நோய்த் தாக்குதலை உண்டாக்கும் சார்ஸ் வைரஸ்

சமீப நாட்களில் வுஹானில் உள்ள கடல் உணவு மற்றும் நேரடி விலங்கு சந்தையிலிருந்து பரவிய இந்த வைரஸினால் இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்நோய் சீனாவிலிருந்து சென்ற தாய்லாந்து மற்றும் ஜப்பானைச் சேர்ந்த இருவரை கடுமையாகப் பாதித்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

தற்போதைய தகவல்களின் அடிப்படையில், வைரஸிலிருந்து அமெரிக்கர்களுக்கு ஏற்படும் ஆபத்து பெரிய அளவுக்கு இல்லை. தற்போது இதில் பாதித்துள்ளவர்களின் எண்ணிக்கை குறைவானதுதான். எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது.

இதற்காக மூன்று விமான நிலையங்களுக்குக் கூடுதலாக மருத்துவத் துறை சார்ந்த 100 ஊழியர்கள் நியமிக்கப்பட்ட உள்ளனர். உள்வரும் பயணிகள் ஒரு கேள்வித்தாளை நிரப்பி வெப்பநிலை சோதனைக்குச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள்.

அவர்களில் யாருக்காவது சாத்தியமான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தால் அவர்களுக்குக் கூடுதலாக மற்றொரு ஸ்கிரீனிங் மற்றும் விரைவாக கண்டறியும் சோதனையில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

நோய்க்கான அறிகுறி கண்டறியும் உபகரணங்கள் மேம்பட்ட தரத்தில் உள்ளவை என்பதால், தேவையான பரிசோதனைகளை மிகவும் விரைவாக ஆராய்ந்து ஒரே நாளுக்குள்ளேயே முடித்து அனைத்து முடிவுகளையும் உடனுக்குடன் தெரிவித்துவிடக்கூடியது என்பதால் பயணிகளின் நேரம் வீணடிக்கப்படுவதில்லை.

இவ்வாறு அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (சி.டி.சி) அதிகாரி நான்சி மெசொன்னியர் தெரிவித்துள்ளார்.

சார்ஸ் குடும்ப வைரஸ்களின் இயல்புகளையும் விளைவுகளையும் ஆராய்ந்த ஐநாவின் சுகாதார ஏஜென்ஸி, ''பரந்த சார்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த ஆனால் யாரும் இதுவரை கண்டிராத விகாரமான தோற்றம் கொண்ட வைரஸ் சளி, இருமல், காய்ச்சல் என்று தொடங்கி உயிரையே பறிக்கும் தீவிர நோய்த்தன்மையில் கொண்டுபோய்விடும் அபாய தன்மையைக் கொண்டது'' என்று தெரிவித்துள்ளது.

பாரிஸ் இன்ஸ்டிடியூட் பாஷர் தொற்றுநோயியல் துறையின் தலைவரான அர்னாட் ஃபோன்டனெட்டின், சார்ஸ் குறித்து கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''வழக்கத்திற்கு மாறான வகையில் மனிதர்களை ஒடுங்கச் செய்யும் ஏழாவது வகை கொரோனா வைரஸ் இது ஆகும்.

2002-2003 இல் சார்ஸ் வைரஸ் சீனாவில் 349 பேரையும், ஹாங்காங்கில் 299 பேரையும் கொன்றது. இருமல், காய்ச்சல் மட்டுமின்றி கடுமையான சுவாச நோய் அறிகுறியுடனுடம் கண்டறியப்பட்டுள்ள சார்ஸ் குறித்த எச்சரிக்கை இந்தமுறை கடுமையாக்கப்பட்டுள்ளது. சார்ஸ் வைரலஸ் கொரோனா வைரஸ் குடும்பத்தைச்சேர்ந்த எனினும் அதனைவிட பார்ப்பதற்கு பலவீனமான தோற்றத்தில் இருக்கும். ஆனால், அதன் தாக்குதல் மிகவும் கடுமையான விகாரமான விளைவுகளைத் தரக்கூடும்.''

இவ்வாறு அர்னாட் ஃபோன்டனெட்டின் எச்சரித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x