

ஈரான் மூத்த தலைவர் தனது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்கா கோழைத்தனமாக தளபதி சுலைமானைக் கொன்றுள்ளது. இது அவர்களுக்கு ஏற்பட்ட அவமானம் என்று விமர்சித்தார். மேலும் ஐரோப்பிய நாடுகளை அவர் கடுமையாகச் சாடினார்.
இந்நிலையில் அயத்துல்லா அலி காமெனிக்கு ட்ரம்ப் பதில் அளித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “ஈரானின் மூத்த தலைவர் என்று அழைக்கப்படும் அயத்துல்லா அலி காமெனி, அமெரிக்கா குறித்தும் ஐரோப்பிய நாடுகள் குறித்தும் மோசமாக விமர்சித்து வருகிறார். அயத்துல்லா தனது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஈரானின் பொருளாதாரம் நொறுங்கிக் கொண்டிருக்கிறது. அங்கு மக்கள் துன்பத்தில் உள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான், அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு அமெரிக்காவைப் பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.
இந்தச் சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.