கனடாவில் குடியேறுகிறார் பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி

கனடாவில் குடியேறுகிறார் பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி
Updated on
1 min read

கனடாவில் குடியேற பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி திட்டமிட்டுள்ளார். இதை உறுதி செய்யும் வகையில் அவரது மனைவி மேகன் மெர்கல் நேற்று கனடா சென்றார்.

பிரிட்டிஷ் பட்டத்து இளவரசர் சார்லஸின் இளைய மகன் ஹாரி. இவர் கடந்த 2018-ம் ஆண்டில் அமெரிக்காவை சேர்ந்த நடிகை மேகன் மெர்கலை திருமணம் செய்து கொண்டார். கருப்பின தாய், வெள்ளையின தந்தைக்கு பிறந்த மேகனுக்கு அரச குடும்பத்தினர் உரிய மரியாதை கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரியும் மேகன் மெர்கலும் அண்மையில் அறிவித்தனர். இருவரும் கனடாவில் குடியேற திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

இதை உறுதி செய்யும் வகையில் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண தலைநகர் விக்டோரியாவுக்கு மேகன் மெர்கல் நேற்று சென்றார். அங்குள்ள விமான நிலையத்தில் இருந்து அவர் காரில் புறப்பட்டு சென்றார். அவர் மீண்டும் பிரிட்டனுக்கு திரும்ப மாட்டார் என்று கூறப் படுகிறது. இளவரசர் ஹாரியும் விரைவில் மனைவியுடன் இணைந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடஅமெரிக்காவில் குடியேற உள்ளோம் என்று இளவரசர் ஹாரி ஏற்கெனவே அறிவித்துள்ளார். ஆனால் எந்த நாடு என்று தெரிவிக்கவில்லை. கனடா அரசு தரப்பிலோ, இளவரசர் ஹாரி தரப்பிலோ இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in