Published : 17 Jan 2020 05:49 PM
Last Updated : 17 Jan 2020 05:49 PM

இந்துத்துவா என்று அழைக்கப்படும் தீவிரவாத சித்தாந்தத்தால் இந்தியா கைப்பற்றப்பட்டுள்ளது: இம்ரான் கான்

இந்துத்துவா என்று அழைக்கப்படும் தீவிரவாத சித்தாந்தத்தால் இந்தியா கைப்பற்றப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஐ.நா. சபை, வல்லரசு நாடுகளிடம் முறையிட்டது. ஆனால், சீனாவைத் தவிர வேறு எந்த நாடும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கவில்லை.

இந்த நிலையில் காஷ்மீர் விவகாரம் குறித்து ஜெர்மனி பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இம்ரான் கான் பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

அதில் இம்ரான் கான் பேசியதாவது:

“காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச சமூகம் மந்தமான பதிலையே அளித்துள்ளது. அவற்றுக்கு வர்த்தகம்தான் முக்கியமானது. இந்தியா மிகப் பெரிய சந்தை. அதன் காரணமாக காஷ்மீர் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் இவ்வாறு நடந்து கொண்டுள்ளன.

ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு கிடைத்த ஊடக கவனம் காஷ்மீருக்குக் கிடைக்கவில்லை. இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை உலக நாடுகளுக்கு எச்சரித்த முதல் தலைவர் நான் தான். 'இந்துத்துவா' என்று அழைக்கப்படும் தீவிரவாத சித்தாந்தத்தால் இந்தியா கைப்பற்றப்பட்டுள்ளது. இது ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தம் ஆகும். இவர்கள் அங்குள்ள சிறுபான்மை மக்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்புகின்றனர்.

நான் பிரதமர் ஆனது முதலே இந்தியாவுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு முயற்சி எடுத்து வருகிறேன். பிரதமராக எனது முதல் உரையில் இந்தியா ஒரு அடி எடுத்து வைத்தால் இரு நாடுகளிடையே இடையே உள்ள வித்தியாசத்தைத் தீர்க்க நாங்கள் இரண்டு அடி எடுத்து வைக்கத் தயாராக இருக்கிறோம் என்று கூறி இருந்தேன். அதன்பின்னர்தான் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தின் காரணமாக இந்தியா இதற்கு எந்தவித பதிலும் அளிக்கவில்லை என்று எனக்குத் தெரியவந்தது''.

இவ்வாறு இம்ரான் கான் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x