Published : 17 Jan 2020 08:59 AM
Last Updated : 17 Jan 2020 08:59 AM

ஐ.நா.வில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயற்சி: பாகிஸ்தான், சீனாவுக்கு மூன்றாவது முறையாக தோல்வி

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயன்ற பாகிஸ்தானும், சீனாவும் மூன்றாவது முறையாக தோல்வியை தழுவியுள்ளன.

காஷ்மீர் விவகாரம் இருதரப்பு பிரச்சினை என மற்ற உறுப்பு நாடுகள் தெரிவித்துவிட்டதால், பாகிஸ்தான் - சீனாவின் முயற்சி கைகூடவில்லை.

காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி நீக்கியது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஷ்மீரில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், தடை உத்தரவுகளையும் மத்திய அரசு அமலுக்கு கொண்டு வந்தது. இதுதவிர, காஷ்மீர் மாநிலமும் ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.

இந்தியாவின் இந்த நடவடிக்கையானது, காஷ்மீர் மீது நீண்டகாலமாக உரிமை கோரி வரும் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த அந்நாடு, காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சினையாக மாற்ற முயன்றது. பாகிஸ்தானின் இந்த முயற்சிக்கு சீனாவும் ஆதரவளித்தது.

அந்த வகையில், காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை கடந்த ஆகஸ்ட் மாதம் சீனா கூட்டியது. இதில், காஷ்மீர் பிரச்சினையில் இந்தியாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சீனாவும், பாகிஸ்தானும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டன. ஆனால், மற்ற உறுப்பு நாடுகள் இதற்கு இணங்கி வராததால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதேபோல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்சினை குறித்து விவாதிக்க வலியுறுத்தி சீனா சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடப்பதால் இந்த விவாதம் அவசியம் என சீனா வாதிட்டது. ஆனால், பாகிஸ்தானை தவிர மற்ற உறுப்பு நாடுகளின் ஆதரவு இல்லாததால் இந்த முயற்சியும் வெற்றி பெறாமல் போனது.

இந்நிலையில், மூன்றாவது முறையாக, நேற்று நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை பாகிஸ்தான் எழுப்பியது. இதற்கு ஆதரவாக சீன நாட்டு பிரதிநிதிகளும் குரல் கொடுத்தனர். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ரகசியக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்க வேண்டும் என சீனா தெரிவித்தது.

எனினும், அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன் உள்ளிட்ட மற்ற உறுப்பு நாடுகள் சீனாவின் வாதத்தை ஏற்கவில்லை.

மேலும், காஷ்மீர் விவகாரம் என்பது இந்தியா - பாகிஸ்தான் இடையேயான பிரச்சினை என்றும், அதில் தலையிட தாங்கள் விரும்பவில்லை எனவும் அவை ஒருசேர தெரிவித்தன. இதன் காரணமாக, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயன்ற சீனாவுக்கும், பாகிஸ்தானுக்கும் மீண்டும் தோல்வியே பரிசாக கிடைத்துள்ளது.

இந்தியா கண்டனம்

இதனிடையே, சீனா, பாகிஸ்தானின் இந்த செயல்களுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:

சீனாவும், பாகிஸ்தானும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை தவறாக பயன்படுத்த முயல்கின்றன. காஷ்மீர் விவகாரம் இருதரப்பு பிரச்சினை என மற்ற உறுப்பு நாடுகள் தெளிவாக கூறியுள்ளன. எனவே, இனியாவது இதுபோன்ற தர்மசங்கடமான நிலையில் மாட்டிக் கொள்வதை பாகிஸ்தான் தவிர்க்க வேண்டும். அதேபோல், சர்வதேச நாடுகளின் ஒருமித்த முடிவுடன் சீனாவும் ஒத்துப்போக வேண்டும். காஷ்மீர் விவகாரத்தில் இருந்து அந்நாடு ஒதுங்கியிருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x