

சிரியாவில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து சிரிய கண்காணிப்பு குழு ஒன்று கூறும்போது, ”சிரியா - இராக் எல்லைபுறத்தில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது வான்வழி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வான்வழித் தாக்குதல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் புரட்சி படை தளபதி சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டத்திலிருந்து, சிரியாவில் அல் புகாமல் பகுதியில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாதிகளை குறிவைத்து தொடர்ந்து வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இத்தாக்குதலை ஐஎஸ் அல்லது அமெரிக்க படைகள் நடத்தி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான், அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.