

பாகிஸ்தானில் மசூதியில் நடத்தப்பட்ட சக்தி வாய்ந்த குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிகை 15 ஆக அதிகரித்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பாகிஸ்தான் போலீஸார் தரப்பில், “ பாகிஸ்தானின் தென்கிழக்கு பகுதியிலுள்ள குவெட்டா நகரில் மசூதி ஒன்றில் வெள்ளிக்கிழமை வழிபாடு நடந்து கொண்டிருந்தபோது சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் உயிர் சேதமும் ஏற்பட்டது. 20க்கும் அதிகமானவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனரர். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பலியாகினர்.
இதனைத் தொடர்ந்து இந்தக் குண்டு வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.” என்று தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலை பாகிஸ்தானிலுள்ள அமெரிக்க தூதரகம் கடுமையாக கண்டித்துள்ளது.
இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுக் கொண்ட ஐஎஸ் தீவிரவாதிகள் தலிபான்களின் பாடசாலையை குறி வைத்து இந்தக் குண்டுவெடிப்பை நடத்தியதாகவும் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தான் பதவி ஏற்றது முதல் தீவிரவாதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். எனினும் குவெட்டா போன்ற பதற்றமிக்க நகரங்களில் தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு இடையேயான சண்டைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.