

தவறுதலாக உக்ரைன் விமானத்தை நடுவானில் ஏவுகணையை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஒப்புக் கொண்டுள்ள நிலையில் இத்தவறுக்கு அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தனது ஆழ்ந்த வருத்தத்தை பதிவு செய்துள்ளார்.
ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாயினர். பலியானவர்களில் 147 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள்.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது எனவே விமானத்தின் மீது ஈரான் தவறுதலாக தாக்குதல் நடத்தியுள்ளது என்று அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகள் தெரிவித்தன.
மேலும் ஈரானின் தாக்குதலில் உள் நோக்கம் ஏதும் இல்லை என்றும் மனித தவறால் இந்த விமான விபத்து நடந்துள்ளதாகவும் இந்நாடுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தவறுதலாக உக்ரைன் விமானத்தை நடுவானில் ஏவுகணையை பயன்படுத்தி சுட்டு வீழ்த்தியதை ஈரான் ஒப்புக் கொண்டுள்ளது. திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தவில்லை என்றும் மனித தவறுகளால் இது நடந்துள்ளதாக ஈரான் வருத்தம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, ” 176 அப்பாவி மக்கள் இறந்த இந்த பேரழிவான தவறுக்கு ஈரான் தனது அழ்த்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறது. எனது எண்ணங்களும், பிரார்த்தனைகளும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு உடனிருக்கும். என ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது” என்றார்.