

"இந்தியாவின் ராணுவ வலிமையை குறைக்கும் விதமான எந்த முடிவையும் எடுக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விரும்பவில்லை" என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடம் இருந்து ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கு அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.இதற்காக பிரத்யேக சட்டம் ஒன்றையும் அந்நாடு இயற்றியுள்ளது. இதனை மீறி, ரஷ்யாவிடம் இருந்து ராணுவத் தளவாடங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதாரத் தடைவிதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.
இதனிடையே, ரஷ்யாவிடம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்க இந்தியா முடிவு செய்துள்ளது. இதனால், இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவில் பாதிப்பு ஏற்படும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சக உயரதிகாரி ஒருவர், பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது:
ரஷ்யாவிடம் இருந்து ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கு அமெரிக்கா விதித்திருக்கும் தடையில் இருந்து எந்த நாட்டுக்கும் விதிவிலக்கு கிடையாது.
உதாரணமாக, ரஷ்யாவிடம் பாதுகாப்பு தளவாடங்களை வாங்கியதாக துருக்கி மீதும் அண்மையில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 ரக ஏவுகணைகளை வாங்குவதன் மூலம், அமெரிக்காவிடமிருந்து எப்-35 ரக போர் விமானங்கள் இந்தியாவுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். மேலும், ரஷ்யாவிடம் ராணுவ உறவு கொண்டிருக்கும் நாடுகளுக்கு அமெரிக்காவின் ராணுவ தளவாடங்களை வழங்குவதிலும் பிரச்சினை இருக்கிறது. ஏனெனில், அமெரிக்காவின் ராணுவத் தொழில்நுட்பங்கள் ரஷ்யாவுக்கு தெரியவருவதற்கு இது வாய்ப்பாக அமைந்துவிடும்.
இந்தியாவுடன் பேச்சு வார்த்தை
இதுபோன்ற பல விஷயங்கள் குறித்து இந்தியாவிடம் பேச்சு நடத்தி வருகிறோம். இந்தியா - அமெரிக்கா இடையேயான ராணுவ ரீதியிலான வர்த்தக உறவில் கடந்த 15 ஆண்டுகளாக நல்ல முன்னேற்றம் இருந்து வருகிறது. இதையும் இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும். அதேசமயத்தில், இந்த விவகாரத்தில் இந்தியாவின் ராணுவ வலிமையை குறைக்கும் விதமான எந்த முடிவையும் எடுக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் விரும்பவில்லை.
இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.