

சிரியாவில் அடையாளம் தெரியாமல் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் பலர் பலியாகினர்.
இந்தத் தாக்குதல் குறித்து சிரிய கண்காணிப்புக் குழு ஒன்று கூறும்போது, “அடையாளம் தெரியாத இந்த வான்வழித் தாக்குதல் சிரியா - இராக் எல்லையில் அமைந்துள்ள பவ்கமல் பகுதியில் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் பலர் பலியாகினர். மேலும் தீவிரவாதிகளின் வாகனங்களும், ஆயுதங்களும் அழிக்கப்பட்டன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் புரட்சிப் படைத் தளபதி சுலைமான் அமெரிக்கப் படையால் கொல்லப்பட்டதால் ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்நிலையில் சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு தீவிரவாதிகள் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.