

உக்ரைன் விமானத்தை ஏவுகணையை பயன்படுத்தி ஈரான் தகர்த்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டி வரும் நிலையில் அந்நாட்டு அதிகாரிகள் இதுதொடர்பான சில முக்கிய ஆதாரங்களை உக்ரைன் அதிபரை சந்தித்து நேரில் அளித்தனர்.
ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் டெஹ்ரான் அருகே விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர். பலியானவர்களில் 147 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள்.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இந்த விபத்து நடைபெறுவதற்கு சற்று முன்பு இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஈரான் தவறுதலாக ஏவுகணையை வீசி உக்ரைன் விமானத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது. உக்ரைன் விமானத்தை தவறுதலாக எண்ணி, இந்த தாக்குதலை ஈரான் நடத்தி இருக்கலாம் எனவும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். க்ரைன் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தங்களுக்கு உளவுத்தகவல்கள் கிடைத்துள்ளது என்று கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறுகையில் ‘‘உக்ரைன் விமானத்தை ஏவுகணை மூலம் தாக்கி வீழ்த்தியது ஈரான் தான். இதற்காக ஆதாரம் கிடைத்துள்ளது. எங்கள் உளவுத் தகவல்கள் மட்டுமல்ல எங்கள் நேசநாடுகளின் உளவுத்தகவல்களும் இதனை உறுதிப்படுத்தியுள்ளன. ஆனால் இதனை ஈரான் திட்டமிட்டு செய்ததாக நாங்கள் கூறவில்லை. சரியான புரிதல் இல்லாமல், தவறாக புரிந்து கொண்டு இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம்.’’ எனக் கூறினார்.
இந்தநிலையில் அமெரிக்க அதிகாரிகள் உக்ரைன் விமானம் நொறுங்கியது தொடர்பாக சில முக்கிய ஆதாரங்களை உக்ரைன் அதிபரை சந்தித்து நேரில் அளித்தனர்.
இதுகுறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சர் வத்யம் பிரஸ்டாய்கோ கூறியதாவது:
அமெரிக்காவைச் சேர்ந்த அதிகாரிகள் இன்று என்னையும், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஸ்லோன்ஸகி ஆகியோரை சந்தித்து பேசினர். அப்போது உக்ரைன் விமானம் நொறுங்கி விழுந்த சம்பவம் தொடர்பாக சில முக்கிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களை எங்களிடம் வழங்கினர். அதனை நிபுணர்களிடம் நாங்கள் அளித்துள்ளோம்’’ எனக் கூறினார்.