

புகழ்பெற்ற மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்ட இளவரசர் ஹாரி, மெக்கன் மார்கல் தம்பதியின் மெழுகுச் சிலைகள் அரச குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டன.
இளவரசர் ஹாரிக்கும் மற்றும் அவரது மனைவி மெக்கனுக்கும் அரச குடும்பத்துடன் சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவுவதாக இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ஆனால், இதனை வதந்தி என்று வழக்கம்போல் இங்கிலாந்து அரச குடும்பம் அறிவித்தது.
இந்நிலையில் இங்கிலாந்து அரச குடும்பத்தின் உயர் பொறுப்புகளிலிருந்து ஹாரியும், அவரது மனைவி மெக்கனும் விலகுகின்றனர் என்று புதன்கிழமையன்று ஹாரி அறிவித்தார். இளவரசர் ஹாரியின் இந்த முடிவை இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.
மேலும், பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்திலிருந்த இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மெக்கன் மார்கலின் மெழுகுச் சிலைகள் அரச குடும்பத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம் தரப்பில், “இளவரசர் ஹாரி மற்றும் மெக்கன் தம்பதி அரச குடும்பத்தின் உயர் பொறுப்பிலிருந்து விலகியதைக் கண்டு நாங்களும் ஆச்சரியப்பட்டிருக்கிறோம். இந்த நிலையில் பொறுப்புகளிலிருந்து விலகியதைத் தொடர்ந்து இளவரசர் ஹாரி மற்றும் மெக்கன் தம்பதியின் சிலைகள் அரச குடும்பத்திலிருந்து நீக்கப்படுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.