

ஈரானில் 180 பலியான உக்ரைன் விமானம் விபத்துக்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக விசாரணைக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இமாம் கொமேனி சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உக்ரைன் விமானம் 737-800 நேற்று (புதன்கிழமை) தெஹ்ரானின் புறப்பகுதியில் விபத்தில் சிக்கியது. இதனைத் தொடர்ந்து விமானம் தனது தொடர்பை இழந்தது. விபத்துக்குள்ளான விமானத்தில் 180 பேர் பயணம் செய்தனர். விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகினர். பலியானவர்களில் 147 பேர் ஈரானைச் சேர்ந்தவர்கள்.
விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் தீப்பிடித்து எரிந்ததாக ஈரான் விசாரணைக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் விசாரணைக் குழு கூறும்போது, ''விமானம் மிக உயரமாகப் பறந்து கொண்டிருக்கும்போதே தீப்பிடித்துள்ளது. விபத்துக்குள்ளான விமானம் மூன்று நாட்களுக்கு முன்னர்தான் முழுவதுமாக சரிபார்க்கப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் எந்த மாதிரியான தொழில்நுட்பக் கோளாறால் விமான விபத்து ஏற்பட்டது என்பதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.