

வடக்கு சிரியாவில் நடத்தப்பட்ட கார் குண்டுவெடிப்பில் துருக்கி ராணுவ வீரர்கள் பலியாகினர்.
இதுகுறித்து துருக்கி ராணுவம் தரப்பில், “ சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக துருக்கி ராணுவம் சண்டையிட்டு வருகிறது. இந்த நிலையில் அங்கு நடந்தப்பட்ட கார் குண்டுவெடிப்பில் துருக்கி ராணுவ வீரர்கள் பலியாகினர்” என்று தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை யார் நடத்தினார்கள் என்ற தகவல் வெளியாகவில்லை என்றும் குர்து கிளர்ச்சியாளர்கள் இத்தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனவும் துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது.
துருக்கி எல்லையையொட்டிய சிரியாவில் குர்து போராளிகள் எல்லையோர பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளனர் என்று கூறி அவர்கள் மீது தாக்குதல் நடத்த துருக்கி அதிபர் எர்டோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சிரியாவில் துருக்கிப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
துருக்கியின் தாக்குதல் காரணமாக சுமார் 4 லட்சம் மக்கள் சிரியாவின் வடக்குப் பகுதியிலிருந்து வெளியேறினர். பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
சிரியா மீதான தாக்குதல் காரணமாக உலக நாடுகள் துருக்கி மீது விமர்சனங்கள் எழுப்ப, துருக்கி மற்றும் குர்துப் படை இடையே 5 நாள் போர் நிறுத்தம் ஏற்பட்டது.