

ஈரான் அமெரிக்காவுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ரஷ்ய அதிபர் புதின் சிரியா நாட்டு அதிபர் ஆசாத்தை சந்தித்திருக்கிறார்.
ஈரான் புரட்சிப்படை தளபதி சுலைமான் மீது அமெரிக்க படைகள் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தியது.
இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான் அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை சிரியா தலைநகர் டமாஸ்கஸில் ரஷ்ய அதிபர் புதின், சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை சந்தித்தார்.
இந்தச் சந்திப்பில் ரஷ்ய ராணுவ வீரர்களுக்கு புதின் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்ததாகவும், சிரியாவில் உள்ள ரஷ்ய ராணுவ இருப்பு குறித்து ஆலோசித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கும், ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடந்த ஆறு ஆண்டுகளாக நடந்துவரும் சண்டை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
இதில் ஆசாத்துக்கு ரஷ்யா ஆதரவளித்து வருகிறது. ஐஎஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த சிரியாவின் பல்வேறு பகுதிகள் அரசு கூட்டுப் படைகளால் மீட்கப்பட்டு விட்டன.