

" 52 இடங்களைத் தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்து கருத்துப் பதிவிட்டவர்கள் 290, #ஐஆர்655 என்ற எண்ணை மறந்துவிடக்கூடாது ஒருபோதும் ஈரான் நாட்டுக்கு மிரட்டல் விடுக்க முடியாது"
கடந்த இரு நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு எச்சரிக்கை விடுத்து ஈரான் அதிபர் ஹசன் ருஹானி ட்விட்டரில் பதிவிட்ட கருத்துதான் இது.
ஈரான் நாட்டின் இஸ்லாமிய புரட்சிகரப்படையின் தளபதி காசிம் சுலைமானைக் அமெரிக்க ராணுவம் படுகொலை செய்தபின், அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான நேரடிப் பகை அதிகரித்திருக்கிறது.
அமெரிக்கர்களைத் தாக்கினால், சொத்துக்களைச் சேதப்படுத்தினால், ஈரானின் 52 இடங்களை முக்கியமான இடங்களை அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த மிரட்டலுக்குப் பதிலடியாகத்தான் ஐஆர்655, 290 எண்ணையும் ஈரான் அதிபர் பதிவிட்டார்.
ஆனால், நெட்டிசன்கள் பலருக்கும் அதென்ன #ஐஆர்655 என்ற எண் என்று கேள்வி கேட்கத் தொடங்கினார்கள். பலருக்கும் ஐஆர்655, 290 என்ற எண்ணுக்கும் இடையிலான தொடர்பை அறிந்து கொள்ளும் ஆர்வமும் அதிகரித்தது. அது குறித்து நாமும் விரிவாகப் பார்க்கலாம்.
அமெரிக்கா, ஈரான் இடையிலான பகை காலங்காலமாக நீடித்து வருகிறது. அமெரிக்காவில் சென்று எந்த உயர்நிலைப்பள்ளியின் மாணவர்களிடம் ஈரான் குறித்துக் கேள்விகேட்டால், “எதிரி”, “அச்சுறுத்தும் நாடு”, “அணு ஆயுத நாடு” என்று விஷம் கக்கும் வார்த்தைகளைப் பேசுவார்கள்.
ஆனால்,அவர்களிடம் “ஐஆர் 655” என்ற எண் குறித்துக் கேட்டால் வரலாறு அவர்களின் வார்த்தையை மவுனமாக்கிவிடும். இதே கதைதான் ஈரானிலும் இருக்கிறது.
இருதரப்பு நாடுகளுக்குமே ஐஆர்655 என்ற எண் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திச் சென்றிருக்கிறது. ஆனால், இதில் ஆறாத வடுவாக ஈரானுக்கு மட்டுமே இன்னும் இருக்கிறது.
“ஐஆர் 655” என்பது ஈாரன் நாட்டின் விமானத்தின் எண். ஈரான், அமெரிக்கா இடையிலான உறவு அழிந்து, ஜென்ம விரோதிகளாக மாற இந்த விமானம் முக்கியக் காரணமாக அமைந்தது. இந்த கதை தெரிந்தாலே ஏன் இருதரப்பு உறவுகள் மோசமாகிவிட்டதற்கான காரணம் பலருக்குப் புரிந்துவிடும்.
கடந்த 1988-ம் ஆண்டு, ஈரானுக்கும், ஈராக்கிற்கும் உச்ச கட்டப்போர் நடந்து கொண்டிருந்த நேரம் அது. பெர்ஷியன் வளைகுடா கடற் பகுதி பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளுக்குக் கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் பாதை என்பதால் இரு நாட்டு விமானங்களும் இங்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பெர்ஷியன் வளைகுடாவில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தன.
அதில் குறிப்பாக அமெரிக்காவின் விமானம் தாங்கி “வின்சென்னஸ்” கப்பல் கண்காணிப்பில் இருந்தது. கப்பலில் கேப்டன் வில்லியம் ரோஜர்ஸ் பணியில் இருந்தார். மிகவும் ஆவேசமானவர், போர்ச்சூழலில் ஆக்ரோஷமாகச் செயல்படக்கூடியவர், எதிரிகளை மூர்க்கத்தனமாக ஓடவிடக்கூடியவர் என்று பெருமையாக அமெரிக்கப் படைகள் மத்தியில் அறியப்பட்டவர் ரோஜர்ஸ்
1988-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதிதான் அந்த துயரம் நடந்தது. ஈரானின் பந்தர் இ அப்பாஸ் விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு மெக்கா புனித பயணத்துக்காக 290 பயணிகளுடன் ஐஆர்655 என்ற விமானம் புறப்பட்டது. 7 ஆயிரம் மணிநேரம் விமானத்தை இயக்கிய அனுபவம் நிறைந்த பைலட் மோஸின் ரேசியான் விமானத்தை இயக்கினார்.
விமானம் புறப்பட்டுச் சரியாக 27 நிமிடங்கள் ஆகி, காலை 10.47 மணிக்கு ஈரானின் கடற்பகுதிக்கு மேல் சென்று கொண்டிருந்தது.
இந்த ஐஆர்655 எனும் விமானம் ராணுவப் பயன்பாட்டுக்கும், பயணிகள் போக்குவரத்துக்கும் பயன்படக்கூடியது. எப்-14 என்ற போர் விமானத்தைப் போல் தோற்றத்தில் இருந்தாலும் அதைக்காட்டிலும் சிறியது.
ஈரான் கடற்பகுதிக்குள் ஐஆர்655 விமானம் பறந்தபோது, கடற்பகுதியில் கண்காணிப்பில் இருந்த அமெரிக்காவின் “வின்செனஸ்” கப்பலின் ரேடாரில் விமானம் பறப்பது தெரியவந்தது.
விமானம் எங்கிருந்து வருகிறது, யாரெல்லாம் இருக்கிறார்கள், இந்த பக்கம் வராதீர்கள் என்று பலமுறை கப்பலில் இருந்து எச்சரிக்கை அழைப்புகள் விமானத்துக்கு விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
ஆனால், விமானம் தொடர்ந்து முன்னேறிப் பறந்துவர, கேப்டன் ரோஜர்ஸ் ஐஆர்655 விமானத்தை கப்பலில் இருந்த ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்த உத்தரவிட்டார். சரியாக 10.54 மணிக்கு விமானத்தை வின்செனஸ் கப்பல் ஏவுகணை மூலம் வீழ்த்தியது.
விமானம் தீப்பிளம்புடன், நொறுங்கி கடலுக்குள் விழுந்தபின்பு தான் அது பயணிகள் விமானம் என்று அமெரிக்கக் கடற்படை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. விமானத்தில் 66 குழந்தைகள், 10 இந்தியர்கள் உள்பட 290 பேரும் கடலில் விழுந்து மாண்டனர். ஒருவர்கூட உயிர் தப்பவில்லை.
ஈரான், ஈராக் போர் உச்சத்தை அடைந்திருந்த நிலையில் விமானம் சுடப்பட்ட சம்பவம் இருநாடுகளின் போரையும் ஏறக்குறைய முடிவுக்குக் கொண்டுவந்தது. ஈாரனும், அமெரி்க்காவும் பரஸ்பரம் குற்றம்சாட்டின.
அமெரிக்க அரசின் வாதத்தின்படி, “ பாதுகாக்கப்பட்ட வான்வெளிக்குள் ஈரான் விமானம் வந்திருக்கக் கூடாது. அவ்வாறு வந்தபோதும் வழக்கமாகப் பயணிகள் விமானம் வரும் வேகக்தைக்காட்டிலும் குறைந்த வேகத்தில், குண்டுவீசுவதுபோல் தாழ்வாக பறந்தது.
எப்-14 டாம்காட் போர் விமானம் போல் பயணிகள் விமானமும் இருந்ததால் தவறாக நினைத்துத் தாக்கிவிட்டோம். பலமுறை விமானத்துக்கு எச்சரிக்கை சமிக்ஞை அளித்தோம், ரேடியோ அலைவரிசை மூலம் எச்சரிக்கை விடுத்தோம் பதில் அளிக்காததால், தற்காப்புக்காகச் சுட்டுவீழ்த்தினோம், 290 பயணிகள் உயிரிழப்புக்கு வருந்துகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், ஈாரனிய அரசோ “ விமானத்தில் இருந்து பயணிகள் விமானத்துக்குரிய சமிக்ஞை, அலைவரிசை போன்றவை கப்பலுக்கு அனுப்பட்டது கறுப்புப் பெட்டி ஆய்வில் இருக்கிறது. இது திட்டமிட்ட தாக்குதல். இதை விபத்து என்று கூற முடியாது சர்வதேச குற்றமாக அறிவிக்கவேண்டும்.
அதுமட்டுமல்லாமல் ஈரானிய கடற்பகுதிக்குள் விமானம் பறந்தபோது எப்படிச் சுடப்பட்டது. அதிலும் ஈரானிய கடற்பகுதிக்குள் அத்துமீறி அமெரிக்க போர்க்கப்பல் வின்செனிஸ் நுழைந்து விமானத்தைத் தாக்கியுள்ளது. அமெரிக்க ராணுவம் இதுபோல் அத்துமீறுவது முதல்முறையல்ல இஐஏஐ 402 விமானம், லிபிய அரபு விமானம்114, கொரிய விமானம் 007 ஆகியவற்றை இப்படித்தான் சுட்டுவிட்டுத் தவறுதலாக நடந்துவிட்டது என அமெரிக்கா கூறியது” என்று குற்றம்சாட்டியது.
மேலும், அப்போது கப்பலின் கேப்டனாக இருந்த ரோஜர்ஸ் மூர்க்கத்தனமாகச் சிந்திக்கக்கக் கூடியவர் அவசரப்பட்டு உத்தரவிட்டுள்ளார் என்றெல்லாம் விமர்சனம் முன்வைக்கப்பட்டது.
ஆனால் விமானத்தில் பயணித்த 290 பயணிகள் உயிர் போனதுதான் மிச்சம். திரும்பிவரப்போவதில்லை என்பதை உணராமல் இரு நாடுகளும் சர்வதேச நீதிமன்றத்துக்குச் சென்றன.
அப்போது இருந்த அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், தங்கள் நாட்டுக் கடற்படை செய்த தவறுக்காக வெளிப்படையாக அறிக்கை வெளியி்ட்டு மன்னிப்புக் கோரினார்.
அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ ஆலோசகரான கென்னத் போலக் தனது “ தி பெர்ஷியன் பசுல்”(The Persian puzzle) என்ற நூலில், ஐஆர்655 பற்றிக் குறிப்பிடுகையில், “ அமெரிக்க ராணுவம் இதைத் திட்டமிட்டுச் செய்யவில்லை, இது தற்செயலாக நடந்த விபத்துதான். இதை ஈரான் எப்படிப் பார்த்தது எனத் தெரியவில்லை.” எனத் தெரிவித்துள்ளார். ஆனால், விபத்து என்றுதான் அமெரிக்க ராணுவம் கூறியதேத் தவிரச் சர்வதேச குற்றமாக அறிவிக்க அமெரிக்க ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை, பிடிவாதமாக மறுத்துவிட்டது.
சர்வதேச நீதிமன்றத்தில் இருநாடுகள் வழக்காடியதில் கடந்த 1996-ம் ஆண்டு இந்த விவகாரத்தில் ஒரு முடிவு கிடைத்தது. அதன்படி “ கடந்த 1988-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி நிகழ்ந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 290 பேர் பலியான சோகமான சம்பவத்துக்கு அமெரிக்க வருத்தம் தெரிவித்தது. ஆனால் சட்டப்படி மன்னிப்பு கோர அமெரிக்கா மறுத்துவிட்டது. அதேசமயம், இழப்பீடாக 6.18 கோடி அமெரிக்க டாலர்கள் அளிக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அதாவது பயணி ஒருவருக்கு 2.13 லட்சம் டாலர்கள் இழப்பீடாக வழங்க ஒப்புக்கொண்டது.
ஆனால், கடைசிவரை தனது பணம், அதிகார பலத்தால் அமெரிக்கா விபத்து என்று வாதிட்டதே தவிர இது சர்வதேச குற்றமாக அறிவிக்கப் பிடிவாதமாக மறுத்துவிட்டது. ஈரான் அரசும் தனது மக்களை பறிகொடுத்துவிட்டு, சர்வதேச குற்றமாக அறிவிக்க வேண்டும் என்று தங்களின் தரப்பு வாதங்களை எல்லாம் வைத்தும் உலகின் பெரிய அண்ணான இருக்கும் அமெரிக்காவின் முன் எடுபடவில்லை. இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையே இருந்த பகைக்குத் தூபம்போட்டு வளர்த்துவிட்டது.
இந்த வழக்கில் தீர்வு எட்டப்பட்டபின் அமெரிக்கா செய்த செயல்தான் இன்னும் அனைத்து நாடுகளுக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தைச் சுட்டு வீழ்த்திய வின்செனிஸ் கப்பலின் கேப்படன் ரோஜர்ஸக்கு அவர் பணிக்காலத்தில் பெர்ஷியன் வளைகுடா கடற்பகுதியில் சிறப்பாகப் பாதுகாப்புப் பணி செய்தமைக்காக லீஜியன் ஆஃப் மெரிட் விருது வழங்கியது அமெரிக்க அரசு.