

துபாயில் டிடிஎஸ் ஈவெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் சித்திரைத் திருவிழா ஏப்ரம் 25-ஆம் தேதி துபாய் இந்தியப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள ஷேக் ராஷித் அரங்கில் வெகு சிறப்புற நடைபெற்றது.
சித்திரைத் திருவிழாவிற்கு டிடிஎஸ் ஈவெண்ட் தலைவர் ஜெயந்தி மாலா சுரேஷ் தலைமை வகித்தார். இந்த விழா சீரோடும் சிறப்போடும் நடைபெற உதவி வரும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார். உலகெங்கும் சிறப்பிடம் வகிக்கும் தமிழர்களை கௌரவிக்கும் விதமாக, அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் துணைச் செயலாளராக உயர் பதவி வகித்து வரும் தமிழர் முனைவர் ராஜன் நடராஜன் இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.
ராஜன் நடராஜன் தனது உரையில், "சமீபத்தில் சர்வதேச வர்த்தகப் பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அமீரக வர்த்தகப் பிரமுகர்களும் பங்கேற்றனர். அவர்கள் தங்களது நாட்டின் வளர்ச்சிக்கு இந்தியர்களே முக்கியப் பங்கு வகித்து வருவதாக குறிப்பிட்டார். இப்படி வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டு, நாம் வாழ்ந்து வரும் நாடுகளை முன்னேற்றப்பாதையில் அழைத்துச் செல்லும் நாம், ஏன் நமது தமிழ்நாட்டை நம்பர் ஒன்னாக கொண்டு வர முடியாது? இத்தகைய முயற்சியினை தமிழகத்தில் 2015 ஆம் ஆண்டு உலகத் தமிழர்கள் ஒன்றிணைந்து செயல் திட்டம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதில் அமீரகத் தமிழர்கள் முக்கியப் பங்கு வகிப்பர்" எனக் குறிப்பிட்டார்.
ஈடிஏ அஸ்கான் ஸ்டார் குழும துணைத் தலைவர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹுத்தீன் அவர்கள் தனது உரையில், தன்னை அமீரகத் தமிழர்களின் முகவரி என்றும், தமிழ் தான் நம் அனைவருக்கும் முகவரி என்றும் குறிப்பிட்டார். ஸ்டார் கல்வி நிறுவன மேலாளர் மர்யம் ஸலாஹுத்தீன் பூங்கொத்து வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
பும்கா குரூப் மேலாண்மை இயக்குநர் சித்தார்த் பாலச்சந்திரன், சமூக சேவகர் கே. குமார், அமீரக வர்த்தகப் பிரமுகர் சைஃப் அல் ஜலால், லிபியா முன்னாள் அதிபர் கடாஃபியின் ஆலோசகரும், மால்டா பிரதம மந்திரியின் தலைமை ஆலோசகருமான சௌக்கத் அலி உள்ளிட்டோரும் தங்களது வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.
திரைப்பட இசையமைப்பாளர் பரத்வாஜ் தனது திரையுலக அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ’ஞாபகம் வருதே’, ’ஒவ்வொரு பூக்களுமே’ உள்ளிட்ட பாடல்களை நினைவு கூர்ந்து ரசிகர்களின் பாராட்டினைப் பெற்றார்.
தங்க மீன்கள் படத்திற்காக தேசிய விருது பெற்ற செல்வி சாதனா நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து சின்னத்திரை சூப்பர் சிங்கர்ஸ் வெற்றியாளர்கள், மிமிக்ரி கலைஞர் சேது ஆகியோரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.