

இராக்கில் சர்வதேச தூதரக கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியில் மீண்டும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஏஎன் ஐ வெளியிட்ட செய்தியில், “ இராக் தலை நகர் பாக்தாத்தில் உள்ள சர்வதேச தூதரக கட்டங்கள் இருக்கும் பகுதியில் இன்று (வியாழக்கிழமை) இரண்டு ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளிவரவில்லை” என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான் அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.
இந்த சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தது.
இந்த நிலையில் இராக்கில் சர்வதேச தூதரக கட்டிங்கள் இருக்கும் பகுதியில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்தத் தாக்குதலை ஈரான்தான் நடத்தியது என்பதற்கான தகவல் ஏதும் வராத நிலையில் இந்தத் தாக்குதலை ஈரான் ஆதரவு தீவிரவாத குழு நடத்தியுள்ளது என்று அமெரிக்க தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.