Published : 09 Jan 2020 06:42 AM
Last Updated : 09 Jan 2020 06:42 AM

பாரசீக வளைகுடாவில் அதிகரிக்கும் பதற்றம்

எப்போதுமே பதற்றம் நிறைந்த பகுதி பாரசீக வளைகுடா.. இப்போது இன்னும் அதிகரித்திருக்கிறது. அமெரிக்க ட்ரோன் தாக்குதலில் ஈரானின் புரட்சிகர படையின் தளபதி காசிம் சுலைமானி உயிரிழந்ததும், அதற்கு பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்தியிருக்கும் தாக்குதலுமே இந்த போர் பதற்றத்துக்கு காரணம்.

இராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்துக்கு வெளியே சுலைமானி வந்த கார் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. சுலைமானி படுகொலை சம்பவம் தங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட போர் என ஈரான் கூறியது. ஆனால், அமெரிக்கா மீதும் அதன் கூட்டாளி நாடுகள் மீதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி பலரின் சாவுக்கு காரணமான தளபதி சுலைமானி எப்போதோ கொல்லப்பட்டிருக்க வேண்டியவர் எனக் கூறியிருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். பாரசீக வளைகுடா பகுதியில் இருக்கும் அமெரிக்க வீரர்கள் மீதும் தூதரக அதிகாரிகள் மீதும் சுலைமானி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்ததாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சமீபத்தில் சுரங்கத்தில் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட ஐஎஸ் அமைப்பின் தலைவன் அபு பக்கர் அல் பாக்தாதியை வேட்டையாட அமெரிக்காவுக்கு சுலைமானி உதவியிருக்கிறார் என்பதுதான். அமெரிக்காவின் சிறப்பு படைப் பிரிவினர் சிரியாவில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

ஏற்கெனவே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பழிக்குப் பழியாக தாக்குதல் நடத்த அமெரிக்காவின் 35 நிலைகளை தேர்வு செய்துள்ளோம் என ஈரானும், இப்படி ஏதாவது செய்தால், ஈரானின் 52 நகரங்களை தகர்த்து விடுவோம் என அமெரிக்காவும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்திருக்கின்றன.

இந்த நிலையில், தற்போதைய ஈரானின் தாக்குதல் பாரசீக வளைகுடாவில் மேலும் பதற்றத்தை அதிகரித்திருக்கிறது.

கடந்த 1979-ம் ஆண்டில் ஈரானில் அதிபராக இருந்த ஷாவின் ஆட்சி முடிவுக்கு வந்து புரட்சி வெடித்தபோது, 52 அமெரிக்கர்களை 444 நாட்களுக்கு ஈரான் படைகள் பிணைக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தன. அதை நினைவுகூரும் வகையில்தான் 52 நகரங்களில் தாக்குதல் நடத்தப் போவதாக அமெரிக்கா கூறியுள்ளது.

அமெரிக்காவின் இந்த ட்ரோன் தாக்குதல் சுலைமானியை மட்டும் குறிவைத்து நடத்தப்பட்டது அல்ல. சுலைமானிக்கு மிகவும் நெருக்கமான இராக் ராணுவ தலைவர் அபு மஹ்தி அல் முஹாண்டியும் இந்த தாக்குதலில் பலியாகியிருக்கிறார். 2003-ம் ஆண்டில் சதாம் உசேன் வீழ்ச்சிக்குப் பிறகு, இராக்கும் அமெரிக்காவும் நெருக்கமாக இருந்தாலும் சமீப காலமாக, ஈரானுடன் நெருக்கம் காட்டி வருகிறது இராக். ஆனால் அமெரிக்காவின் இந்த ட்ரோன் தாக்குதலும், அதற்கு பதிலடியாக அமெரிக்க படைதளம் மீது தற்போது ஈரான் நடத்தியிருக்கும் ஏவுகணைத் தாக்குதலும் இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடிக்கும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இராக்கில் 5,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கின்றனர். அவர்களுக்கு ஈரான் மூலமோ அல்லது இராக்கில் இயங்கி வரும் ஈரானுக்கு நெருக்கமான தீவிரவாத அமைப்புகள் மூலமோ ஆபத்து ஏற்பட்டால், ட்ரம்ப் நிர்வாகம் கண்டிப்பாக தீவிரமான நடவடிக்கையை எடுக்கும் என்பது உறுதி.

ஈரானும் அமெரிக்காவும் பலப் பரீட்சையில் இறங்கினால், அதன் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளிலும் இஸ்ரேல் நாட்டிலும் பதற்றம் அதிகரிக்கும் என்பதால், இந்தப் பிரச்சினை கட்டுமீறி போகக் கூடாது என உலக நாடுகள் விரும்புகின்றன. கச்சா எண்ணெய் விலை 5 சதவீதம் வரை அதிகரித்து விட்டது. தங்கம் விலை தொடர்ந்து ஏறிக்கொண்டே போகிறது. பங்குச் சந்தைகளும் பாதிக்கப்படத் தொடங்கி விட்டன. கடந்த 1980-ல் ஈரான் - இராக் போரின்போது நடந்தது போல், பாரசீக வளைகுடாவில் எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அதனால் கச்சா எண்ணெய் சப்ளை பாதிக்கப் படும், விலை எகிறும் என உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இதுபோக, மத்திய கிழக்கு நாடுகளில் ஏறக்குறைய 80 லட்சம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். போர் ஏற்பட்டால் இவர்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்படும்.

ஈரான் மீதான நடவடிக்கைகளால், அதிபர் ட்ரம்புக்கு ஆளும் குடியரசுக் கட்சி தலைவர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருக்கிறது. ஆனால், அதிபர் ட்ரம்பை பதவியில் இருந்து நீக்கும் வகையில் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், இது திசை திருப்பும் முயற்சி என ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர். சுலைமானியின் அரசியல் கொலை, சர்வதேச விதிமுறைகளை மீறிய செயல் என்றும் அவர்கள் குறை கூறியுள்ளனர். கடந்த 2011-ம் ஆண்டில் அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஈரான் மீது பராக் ஒபாமா போர் தொடுக்க முயல்கிறார் என ட்ரம்ப் புகார் கூறியிருந்தார். இப்போது அதே புகாரை ட்ரம்புக்கு எதிராக திருப்பியுள்ளனர் ஜனநாயகக் கட்சியினர்.Sign up to receive our newsletter in your inbox every day!

 
x