

ஈரான் புரட்சிப்படைத் தளபதியான காசிம் சுலைமானியைக் கொலை செய்ததற்குப் பதிலடியாக இராக்கில் உள்ள அமெரிக்க படை மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக இராக் பிரதமருக்கு விஷயம் தெரிந்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இராக் பிரதமர் ஆதில் அப்துல் மாடிக்கு ஈரான் தாக்குதல் குறித்த தகவலை முன் கூட்டியே அளித்துள்ளது.
இது தொடர்பாக இராக் பிரதமரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “புதன் நள்ளிரவுக்குச் சற்று பிறகு ஈரானிடமிருந்து எங்களுக்குத் தகவல் வந்தது. அதாவது சுலைமானி கொலைக்கான பதிலடி தொடங்கியது அல்லது தொடங்கவிருக்கிறது” என்று ஈரான் தகவல் அளித்தது என்றார்.
அதாவது அமெரிக்கப் படை மீது தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் கூறியது, ஆனால் இடத்தைக் குறிப்பிடவில்லை.
எர்பில், அன்பார் மாகாணங்களில் உள்ள அமெரிக்க முகாம்கள் மீது ஏவுகணைகள் தாக்குதல் நடக்கும் போது இராக் பிரதமர் அப்துல் மாடிக்கு அமெரிக்காவிடமிருந்து போன் வந்தது என்றார் இராக் பிரதமரின் செய்தித் தொடர்பாளர்.
இதுவரை பலி எதுவும் இல்லை என்று இராக் ராணுவம் தரப்பிலோ, அமெரிக்கத் தரப்பிலோ தெரிவிக்கப்படவில்லை.