22 ஏவுகணைகள் தாக்குதல்; 'அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம்'- ஈரான் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி ஆவேசம்

ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி: கோப்புப் படம்.
ஈரான் தலைவர் அயத்துல்லா அலி காமெனி: கோப்புப் படம்.
Updated on
2 min read

இராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதன் மூலம் அமெரிக்காவின் முகத்தில் அறைந்துள்ளோம் என்று ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

ஈரான் ராணுவத்தின் முக்கியத் தளபதியாகவும், குட்ஸ் படையின் தளபதியாகவும் இருந்த காசிம் சுலைமானை கடந்த 3-ம் தேதி ஏவுகணைத் தாக்குதல் முலம் அமெரிக்கா கொலை செய்தது. பாக்தாத் விமான நிலையத்தில் வந்திறங்கிய சுலைமானை அமெரிக்க ராணுவம் தனது ஆளில்லா விமானத்தின் மூலம் ஏவுகணையை வீசித் தாக்குதல் நடத்திக் கொன்றது. சுலைமானுடன் சேர்ந்து அவரின் மருமகன் முகந்தீஸ் உள்பட்ட 8 பேர் கொல்லப்பட்டனர்.

இந்தப் படுகொலைக்குப் பழி தீர்க்கும் விதத்தில் இராக்கில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது இன்று அதிகாலை ஈரான் ராணுவம் ஏவுகணைகள் வீசித் தாக்குதல் நடத்தியது. இராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரானின் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது.

தரையில் இருந்து வான் மற்றும் தரை இலக்கை துல்லியமாகத் தாக்கும் ஃபட்டா 313 ரக ஏவுகணைகளைப் பயன்படுத்தி, ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப்படை இன்று அதிகாலை அமெரிக்க விமானத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. கெர்மான்ஷா மாநிலத்தில் இருந்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 22 ஃபட்டா 313 ரக ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன என ஈரான் தெரிவித்துள்ளது

இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவம் தரப்பில் 80 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், ஹெலிகாப்டர்கள், தளவாடங்கள் பலத்த சேதமடைந்ததாகவும் ஈரான் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஈரானின் இந்தத் தாக்குதலுக்கு பிரிட்டன், ஜெர்மனி நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஆனால், அமெரிக்கா தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான பதிலும், எதிர்வினையும் வரவில்லை.

இந்த சூழலில், ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி காமெனி நாட்டு மக்களுக்கு இன்று உரையாற்றினார். அவர் கூறுகையில், "மேற்கு ஆசியாவில் அமெரிக்கா திட்டமிட்டிருந்த பல சதித் திட்டங்களை முறியடிக்கும் வல்லமை படைத்தவராக காசிம் சுலைமான் இருந்தார். சுலைமான் துணிச்சலான ராணுவ வீரர். அமெரிக்கர்களுக்கு எதிராகப் பாலஸ்தீன மக்களுக்கு உதவியவர் சுலைமான்.

சுலைமான் கொல்லப்பட்டதன் மூலம் நம்முடைய புரட்சி மீண்டும் புத்துயிர் பெற்று உலகிற்கு வெளிக்காட்டியுள்ளது. நம்முடைய எதிர்ப்பு தொடர்ந்து உயிர்ப்புடன்தான் இருந்து வருகிறது. அமெரிக்காவின் முகத்தில் நேற்று இரவு அறை கொடுத்துள்ளோம். இந்தப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஊழல் படித்த செயல்கள் முடிவுக்கு வரவேண்டும்

நம்முடைய பிராந்தியத்தையே அமெரிக்கா அழித்துவிட்டு, பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறது. ஆனால், அவர்களின் அனைத்துத் தலையீடுகளும் முடிவுக்கு வர வேண்டும். ராணுவ ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் அதை நாம் எதிர்கொள்வோம். சுலைமான் கொல்லப்பட்டதற்குப் பழிக்குப் பழியாக ராணுவ நடவடிக்கை போதாது " எனத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in