

ஈரான் புரட்சி படை தளபதி சுலைமான் கொல்லபட்டதற்கு காரணமாக இருந்த ட்ரம்ப் மற்றும் அமெரிக்க ராணுவத்தை தீவிரவாதியாக ஈரான் அறிவித்துள்ளது.
ஈரானின் சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட தளபதி சுலைமான் அமெரிக்கப்படையால் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு எதிரான முந்தைய சட்ட திருத்தத்தில் ஈரான் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமையன்று ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் அலி லரிஜானி கூறும்போது, “ தளபதி சுலைமான் கொடூரமாக கொலைச் செய்யப்பட்டதற்கான பழியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார். எனவே நாம் அமெரிக்காவுக்கு எதிராக முன்னர் கொண்டு வந்த சட்ட திருத்தத்தில் மாற்றம் கொண்டுவர இருக்கிறோம். தளபதி சுலைமான் மரணத்துக்கு காரணமான அமெரிக்க ராணுவம், அமெரிக்க படை தளபதிகள், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் என அனைவரும் தீவிரவாதிகளாக கருதப்படுவார்கள் ”என்று தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஈரான் நாடாளுமன்றத்தில் அமெரிக்காவுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பபட்டன.
முன்னதாக, பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் கடந்த வாரம் ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் சூறையாடினர். அதற்குப் பதிலடியாக ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்பட 8 பேரைக் கடந்த வாரம் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி கொலை செய்தது
இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது.