

ஈரானின் 52 முக்கிய இடங்களை தகர்த்துவிடுவேன் என்று கூறி ஈரான் நாட்டை ஒருபோதும் மிரட்ட முடியாது என்பது நினைவில் கொள்ளுங்கள் என்று அமெரிக்க அதிபருக்கு ஈரான் அதிபர் ஹசன் ருஹானி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் கடந்த வாரம் ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் சூறையாடினர். அதற்குப் பதிலடியாக ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்பட 8 பேரைக் கடந்த வாரம் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தி கொலை செய்தது
இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது. அதேசமயம், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பழிக்குப் பழிவாங்குவோம் என்று ஈரானும் சூளுரைத்துள்ளதால் மத்திய கிழக்கு ஆசியாப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஈரானுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துப் பதிவிட்டார். அதில் " ஈரானில் 52 முக்கியமான இடங்களை அமெரிக்கா குறிவைத்துள்ளது. அமெரிக்கர்களைத் தாக்கினாலோ அல்லது அமெரிக்கச் சொத்துக்களைச் சேதப்படுத்தினாலோ ஈரானிய கலாச்சாரத்துக்கும், ஈரானுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்களை அதிவேகமாகச் செயல்பட்டு அழித்துவிடுவோம். அமெரிக்காவுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் அளிக்காதீர்கள்" என எச்சரிக்கை விடுத்தார்
இதற்குப் பதிலடியாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி ட்விட்டரில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு எச்சரிக்கை விடுத்து பதிவிட்டுள்ளார். அதில், " 52 இடங்களைத் தாக்குவோம் என்று மிரட்டல் விடுத்து கருத்துப்பதிவிட்டவர்கள் 290 என்ற எண்ணை நினைவில் கொள்ள வேண்டும். #ஐஆர்655 ஒருபோதும் ஈரான் நாட்டை மிரட்டல் விடுக்க முடியாது" எனத் தெரிவித்தார்
கடந்த 1988ம் ஆண்டில் தெஹ்ரானில் இருந்து துபாய்க்கு ஈரான் 655 என்ற பயணிகள் விமானம் சென்றது. அப்போது ஈரானின் கடற்பகுதிக்குள் பெர்சியன் வளைகுடாவில் விமானம் பறந்தபோது அமெரிக்காவின் வின்செனஸ் போர்க்கப்பல் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது. இதில் 66 குழந்தைகள் உள்பட 290 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதல் குறித்து அப்போது ஈரான் பிரச்சினை எழுப்பியபோது, தவறுதலாகச் சுட்டுவிட்டோம் என்று பதில் அளித்தது. இந்த விவகாரத்தை நினைவுபடுத்தி அதிபர் ருஹானி பதிவிட்டார்