

''மனிதனுக்கு இன்றைய தேவை வேலைகள், சுகாதாரம், கல்விதானே தவிர முடிவற்ற போர் அல்ல'' என நியூயார்க்கில் நூற்றுக்கணக்கான போர் எதிர்ப்பாளர்கள் திரண்டு கோஷங்கள் எழுப்பினர்.
ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் எந்நேரமும் போர்வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம், இராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைச் சூறையாடினர்.
அதற்குப் பதிலடியாக பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், இராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.
நியூயார்க்கில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்
புரூக்ளினில் உள்ள அமெரிக்க செனட்டர் சக் ஷுமரின் குடியிருப்பிற்கு வெளியே ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான் கொல்லப்பட்டதை அடுத்து நியூயார்க்கில் நேற்று மிகப்பெரிய பேரணி திரண்டது.
அதனைத் தொடர்ந்து போர் எதிர்பாளர்களும் ஆர்ப்பாட்ட பேரணி நடத்தினர். நேற்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின்போது போர் எதிர்ப்பாளர்கள், ''நீதி இல்லை, அமைதி இல்லை. மத்திய கிழக்கிலிருந்து அமெரிக்கா வெளியேறு! ஈரானுடன் போர் வேண்டாம்'' போன்ற வாசகங்களைத் தாங்கிய அட்டைகளை ஏந்தியும் கோஷங்களையும் எழுப்பினர்.
மேலும், "வேலைகள், சுகாதாரம், கல்வி, வீட்டுவசதி ஆகியவையே இன்றை மனிதத் தேவைகள், முடிவற்ற போர் அல்ல" மற்றும் "ஈரான் மீது போர் / பொருளாதாரத் தடைகள் வேண்டாம்!" எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.
சுலைமான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து நியூயார்க் நகரம் முக்கிய இடங்களில் பாதுகாப்பை முடுக்கிவிட்டுள்ளது.
ஒரு செய்தியாளர் சந்திப்பின் போது, நியூயார்க் காவல் துறை ஆணையர் டெர்மோட் ஷியா, சில சீரான மற்றும் முக்கியமான இடங்களில் "பல நீண்ட துப்பாக்கிகள் ஏந்திய சீருடை அணிந்த அதிகாரிகளின் கண்காணிப்பில் நியூயார்க் விழிப்புணர்வு இருக்கும். நியூயார்க் மக்களும் விழிப்புடன் இருக்கவேண்டும்.'' என்றார்.
இதற்கிடையில், நியூயார்க் நகர மேயர் பில் டி ப்ளாசியோ ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பேசும்போது, ''நியூயார்க் மக்கள். சுரங்கப்பாதையிலும், பாலங்கள் மற்றும் சுரங்கங்களில் கார் நிறுத்தங்களிலும் அதிக அளவிலான பை சோதனைகளை அவர்கள் சந்திக்க நேரிடும்'' என்று கூறினார்.