

அமெரிக்க மக்கள் மீது தாக்குதல் நடத்தினால், ஈரானின் 52 முக்கியமான இடங்களை நாங்கள் குறிவைத்துள்ளோம், அதிவேகமாகச் செயல்பட்டு அழித்துவிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்
ஈராக்கிலுள்ள அமெரிக்க ராணுவ நிலை மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார். அந்தத் தாக்குதலை, ஈரான் ஆதரவு பெற்ற கடாயெப் ஹிஸ்புல்லா படையினர் நடத்தினர். இதற்குப் பதிலடியாகவே அந்தப் படையினர் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 25 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காபூலிலுள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஏராளமான ஹிஸ்புல்லா ஆதரவுப் போராட்டக்காரர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அலுவலகத்தைச் சூறையாடினர்.
அதற்குப் பதிலடியாக நேற்று முன்தினம் பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி காசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உத்தரவின் பெயரில் தற்காப்பு நடவடிக்கைக்காக எடுத்ததாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் தெரிவித்தது.
இந்த தாக்குதல் குறித்து ஆவேசமாக பேட்டி அளித்த ஈரான் அரசு, " அமெரிக்கா தனது தீவிரமான முட்டாள்தனத்தால், ஆபத்தை பெரிதாக்கி இருக்கிறது. இந்த தாக்குதலுக்கு நாங்கள் நிச்சயம் பதிலடி தருவோம், பழிக்குப்பழிவாங்குவோம்" எனச் சூளுரைத்தது.
இதற்கிடையே, இராக்கின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே நேற்று இரவு இரு ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. குறிப்பாக அமெரிக்க ராணுவம் குவிக்கப்பட்டுள்ள அல்-பாலத் விமானத் தளத்தை நோக்கி இந்த ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டன. ஆனால், அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு எந்தவிதத்திலும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் ஈரானுக்கு பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்து பதிவிட்டார். அதில் " ஈரானில் 52 முக்கியமான இடங்களை அமெரிக்கா குறிவைத்துள்ளது. அமெரிக்கர்களைத் தாக்கினாலோ அல்லது அமெரிக்க சொத்துக்களைச் சேதப்படுத்தினாலோ ஈரானிய கலாச்சாரத்துக்கும், ஈரானுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த 52 இடங்களை அதிவேகமாகச் செயல்பட்டு அழித்துவிடுவோம். அமெரிக்காவுக்கு எந்தவிதமான அச்சுறுத்தலும் அளிக்காதீர்கள்" என எச்சரிக்கை விடுத்தார்