Published : 04 Jan 2020 02:00 PM
Last Updated : 04 Jan 2020 02:00 PM

காட்டுத் தீ எதிரொலி: ஆஸி. பிரதமரின் இந்திய, ஜப்பான் பயணங்கள் ஒத்திவைப்பு

காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடும் ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன்

ஆஸ்திரேயாவில் காட்டுத் தீயினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், இந்தியப் பயணத்தை ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் தள்ளி வைத்துள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ஆஸ்திரேலியாவில் மீட்புப் பணி நடவடிக்கையை நெருக்கமாகக் கவனித்து வருவதால் இந்திய மற்றும் ஜப்பான் பயணத்தை ஆஸ்திரேலிய பிரதமர் ஒத்தி வைத்துள்ளார்.

இந்தியாவும் ஜப்பானும் இதுவரை செய்துள்ள ஏற்பாடுகளை நாங்கள் மிகவும் பாராட்டுகிறோம். மேலும், வரும் மாதங்களில் சுற்றுப்பயணம் தொடர்பான மறுசீரமைக்கப்பட்ட தேதிகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் வெள்ளிக்கிழமை இந்தியப் பிரதமர் மோடி, ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசனைத் தொடர்புகொண்டு காட்டுத் தீயினால் ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியப் பிரதமர் மோரிசன் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 1,300 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இதுவரை 18 பேர் பலியாயினர். 12 பேர் மாயமாயினர். காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த பிரதமர் ஸ்காட் மோரிசன் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x