

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக தனது இந்தியப் பயணத்தை அந்நாட்டு பிரதமர் ஸ்காட் மோரிசன் ரத்து செய்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து ஆஸ்திரேலிய ஊடகங்கள், ''நான் இந்தியப் பயணத்தைத் தொடர விரும்பவில்லை. இயற்கையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்க்க வேண்டிய தேவை உள்ளது” என ஸ்காட் மோரிசன் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ஆஸ்திரேலிய பிரதமர் மோரிசன் ஜனவரி 12 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருந்தார்.
ஆஸ்திரேலியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. இந்தக் காட்டுத் தீக்கு இதுவரை 1300 வீடுகள் இரையாகியுள்ளன. சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.
ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத் தீக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ள நிலையில் 12 பேர் மாயமாகியுள்ளனர். காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த பிரதமர் ஸ்காட் மோரிசன் தவறிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.